செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் முடிவு குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் முடிவு குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
 நாடு முழுவதும் செல்லிடப்பேசி எண்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது செல்லிடப்பேசி இணைப்புடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விதிக்கப்பட்ட காலக்கெடுவை, மத்திய அரசு நீட்டித்துள்ளது.
 இந்நிலையில், ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.
 அப்போது ஆதார் ஆணையம் சார்பில் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி ஆஜராகி வாதாடியதாவது:
 டிராய் அமைப்பின் பரிந்துரையை ஏற்றே, செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டது. தேச பாதுகாப்பு நலன் கருதியே இந்த முடிவை மத்திய அரசு செயல்படுத்தியது.
 ஆதார் ஆணையத்தால் சேகரிக்கப்பட்டிருக்கும் தகவலைக் காட்டிலும் செல்லிடப் பேசி சேவை நிறுவனங்களிடம் தனிப்பட்ட நபர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோரது தகவல்கள் அதிகம் இருக்கின்றன.
 ஆதார் குறித்து மக்களிடையே அச்சம் நிலவுகிறது. ஆனால், தொலைபேசி நிறுவனங்களையோ, வங்கிகளையோ இதுகுறித்து யாரும் கேள்விகளை கேட்பதில்லை. தேவையில்லாமல் ஆதார் அமைப்பை குறிவைக்கின்றனர். பிரபல இணையத்தில் இருக்கும் செயலியில் தனிப்பட்ட நபர்களது விவரம் அதிகம் கிடைக்கின்றன என்றார். அந்த செயலியை நீதிபதிகளிடமும் அவர் காட்டினார். இதை கண்டு நீதிபதிகள் ஆச்சரியப்பட்டனர்.பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
 லோக்நிதி அறக்கட்டளை சார்பில் தொடுக்கப்பட்ட பொதுநல மனு மீது நாங்கள் பிறப்பித்த உத்தரவில், தேச பாதுகாப்பு கருதி, செல்லிடப் பேசி எண்களை பயன்படுத்துவோரின் அடையாளம் மீண்டும் சரிபார்க்கப்பட வேண்டும் என்றுதான் தெரிவித்திருந்தோம். ஆதாரை கட்டாயமாக இணைக்க வேண்டும் என தெரிவிக்கவில்லை.
 அந்த உத்தரவை நீங்கள் கருவியாக பயன்படுத்திக் கொண்டு, செல்லிடப் பேசி எண்ணுடன் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கி விட்டீர்கள். செல்லிடப் பேசி நிறுவனங்களுக்கும், அரசுக்கும் இடையேதான் ஒப்பந்தங்கள் இருக்கின்றன. அப்படியிருக்கையில், செல்லிடப் பேசி எண்ணை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஆதாரை இணைக்க வேண்டும் என்று நீங்கள் எப்படி நிபந்தனை விதிக்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
 அப்போது வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி கூறுகையில், "ஆதார் திட்டத்தை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் ஆதரித்தன. ஆதாரை எதிர்த்து வாதிட்டு வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபெல், ஆதார் விவகாரத்தை கையாண்ட முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உயரதிகார குழு அமைச்சரவையில் இருந்தார்' என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com