ஜப்பான், தென்கொரியாவுக்கு இரும்புத் தாது ஏற்றுமதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கு இரும்புத் தாது ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கு இரும்புத் தாது ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
 தில்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதன் பிறகு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கு இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்வது குறித்து நீண்ட நாள்களாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஏற்றுமதிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. உலோகம் மற்றும் தாதுப் பொருள்கள் விற்பனைக் கழகம் (எம்எம்டிசி) மூலம் இந்த ஏற்றுமதி நடைபெறவுள்ளது. 2018 ஏப்ரல் முதல் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த ஏற்றுமதி நடைபெறும். ஆண்டுக்கு 38 லட்சம் டன் முதல் 55 லட்சம் டன் வரை இருப்புத் தாது ஏற்றுமதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சத்தீஸ்கர் மாநில சுரங்கத்தில் இருந்து எடுக்கப்படும் உயர்ரக இரும்புத்தாது அதிகஅளவில் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
 சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு: சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு குவிண்டாலுக்கு ரூ.200 அதிகரிப்பது என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலம் இனி ஒரு குவிண்டால் சணலுக்கு ரூ.2,700 கிடைக்கும்.
 நடப்பு 2018-19 சணல் சாகுபடி காலத்தில் இருந்து இந்த விலை அளிக்கப்படவுள்ளது. உயர்தர சணலுக்கு மட்டுமல்லாது, நடுத்தர தரத்தில் உள்ள சணலுக்கும் இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு கிடைக்கும்.
 வேளாண் பொருள்கள் சாகுபடி செலவு மற்றும் விலை ஆய்வுக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் சணலுக்கு கூடுதல் விலை கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
 இதன் மூலம் மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகார் ஆகிய மாநில விவசாயிகள் அதிகம் பயனடைவார்கள். நாட்டின் சணல் உற்பத்தியில் 95 சதவீதம் இந்த மூன்று மாநிலங்களில் இருந்துதான் கிடைக்கிறது.
 ரூ.1,290 கோடியில் மூங்கில் வளர்ப்புத் திட்டம்: இது தவிர, தேசிய மூங்கில் வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1290 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்த இரு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலனடைவார்கள்.
 இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.950 கோடி அளிக்கப்படும். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மூங்கில் வளர்ப்புக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, மூங்கில் சாகுபடியின் நன்மைகள் முழுவீச்சில் விவசாயிகளிடம் எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com