ரூ.10,000 கோடி சொத்துக்கு அதிபதி ஆசாராம்: பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்

பாலியல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள சாமியார் ஆசாராம், 1970-களில் சபர்மதி ஆற்றங்கரையோரத்தில் குடிசை ஒன்றை அமைத்து
ரூ.10,000 கோடி சொத்துக்கு அதிபதி ஆசாராம்: பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்

பாலியல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள சாமியார் ஆசாராம், 1970-களில் சபர்மதி ஆற்றங்கரையோரத்தில் குடிசை ஒன்றை அமைத்து ஆன்மிகப் பயணத்தை தொடங்கியவர். இன்றைய தினம் அவருடைய மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.10,000 கோடிகளைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 இந்தியா மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள கிளைகளை சேர்த்து ஆசாராமுக்கு சொந்தமாக 400 ஆசிரமங்கள் உள்ளன.
 ஆசாராமின் வாழ்க்கை வரலாறு குறித்த விடியோ ஒன்றை அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காண முடிகிறது. அந்த விவரங்களின்படி, பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள பெரானி கிராமத்தில் 1941-ஆம் ஆண்டில் பிறந்தவர் ஆசாராம் என அறிய முடிகிறது. அவரது இயற்பெயர் "அசுமால் சிறுமலானி' ஆகும்.
 பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, அசுமால் சிறுமலானியின் பெற்றோர், குஜராத் மாநிலம் ஆமதாபாதில் வந்து குடியேறினர். அங்கு மணிநகர் பகுதியில் உள்ள பள்ளியில் அசுமால் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அவரது தந்தை இறந்துவிட்டார். இதையடுத்து, அவரது பள்ளிப் படிப்பு முடிவுக்கு வருகிறது. இதன் பிறகு பிழைப்புக்காக, அசுமால் சிறுசிறு வேலைகளைப் பார்த்து வந்தார்.
 ஆசாராம் என்ற அவதாரம்: இளமைக் காலத்திலேயே ஆன்மிக தேடலை நோக்கி இமயமலைக்கு சென்றபோது, தமது குரு லிலாஷா பாபுவை அசுமால் சந்திக்கிறார். அந்தக் குரு, 1964-இல் அசுமாலுக்கு "ஆசாராம்' என பெயர் சூட்டுகிறார். தனக்கென்று ஒரு பாதையை தேர்வு செய்து மக்களை வழிநடத்த வேண்டும் என்றும் ஆசாராமுக்கு அவரது குருஜி கட்டளையிடுகிறார். இந்தத் தகவல்களுடன் வாழ்க்கை வரலாறு குறித்த விடியோ நிறைவடைகிறது.
 இமயமலையில் இருந்து 1970-களின் தொடக்கத்தில் ஆமாதாபாத் நகருக்கு ஆசாராம் திரும்பி வந்தார். அங்குள்ள மொடேரா என்ற இடத்தில் சபர்மதி நதிக்கரையோரத்தில் அவர் தவம் இருக்கத் தொடங்கினார். பின்னர் அங்கேயே குடிசை அமைத்து ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டார்.
 அங்கு, பக்தர்கள் அவரை ஆசாராம் பாபு என்று அழைக்கத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, மொடேரா பகுதியிலேயே மிகப் பெரிய ஆசிரமம் ஒன்று கட்டப்பட்டது. இதையடுத்த 40 ஆண்டுகளில் உலகெங்கிலும் 400 ஆசிரமங்களை அமைத்து ஆசாராம் மிகப் பெரிய வளர்ச்சியினை எட்டினார்.
 கடந்த 2013-ஆம் ஆண்டில் ஆசாராம் கைது செய்யப்பட்டபோது அவரது ஆசிரமத்தில் இருந்த ஆவணங்களை காவல் துறையினர் கைப்பற்றினர். அந்த ஆவணங்களின் மதிப்பீட்டின்படி ஆசாராமுக்கு 10,000 கோடிக்கும் அதிகமாக சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.
 பக்தர்களின் நம்பிக்கை: ஆசாராமுக்கு இன்றளவிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் தங்களது குரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் நம்புகின்றனர்.
 பின்னடைவு ஏற்பட்டது எப்படி?
 ஆசாராம், லெட்சுமி தேவி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்தத் தம்பதியருக்கு நாராயணன் சாய் என்ற மகனும், பாரதி தேவி என்ற மகளும் உண்டு.
 ஆசாராமின் மைத்துனர்கள் இருவர், மோடேரியா பகுதியில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்தனர். இந்நிலையில், கடந்த 2008-ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் மர்மமான முறையில் ஆற்றங்கரையோரத்தில் இறந்து கிடந்தனர். இதுதொடர்பான வழக்கில் ஆசாராமின் ஆதரவாளர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் ஆசாராமுக்கு முதலாவது சறுக்கலாக அமைந்தது.
 இதன் பின்னர், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வழக்கில்தான் அவர் தற்போது தண்டனை பெற்றுள்ளார்.
 முன்னதாக, சிறுமி புகார் தெரிவித்த அடுத்த சில நாள்களில், சூரத் நகரை சேர்ந்த சகோதரிகள் இருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஆசாராம், அவரது மகன் நாராயண் சாய் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு காந்திநகர் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது.
 இவை தவிர, சூரத், ஆமதாபாத் உள்ளிட்ட இடங்களில் ஆசிரமப் பணிகளுக்காக நில அபகரிப்பு செய்ததாகவும் ஆசாராம் மீது வழக்குகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com