இந்து மல்ஹோத்ரா நியமனத்துக்கு தடை கோரும் மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

மூத்த வழக்குரைஞர் இந்து மல்ஹோத்ராவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

மூத்த வழக்குரைஞர் இந்து மல்ஹோத்ராவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
 உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப், மூத்த பெண் வழக்குரைஞர் இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்தது. இதில், இந்து மல்ஹோத்ரா நியமனத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு, நீதிபதி ஜோசப்பை நியமிக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 இந்நிலையில், இந்து மல்ஹோத்ராவின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
 கொலீஜியம் பரிந்துரைத்த இருவரையும் மத்திய அரசு ஏற்க வேண்டும் அல்லது இரண்டையுமே மறுபரிசீலனை செய்யக் கூறியிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு நடந்து கொண்டவிதம் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது.
 எனவே மனுவை அவசர மனுவாக ஏற்று உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் நியமனத்தை மத்திய அரசு நிராகரித்ததன் மூலம் நீதித்துறையின் நிர்வாகத்திலும், சுதந்திரத்திலும் மத்திய அரசு தலையிடுகிறது என்று உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர் என்றும் தனது மனுவில் இந்திரா ஜெய்சிங் கூறியிருந்தார்.
 இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
 எந்த மாதிரியான கோரிக்கை இது?. கொலீஜியம் அளித்த பரிந்துரைகளை திருப்பி அனுப்பவும், மறுபரிசீலனை செய்யுமாறு கூறவும் மத்திய அரசுக்கு உரிமை உள்ளது. அதன்படி, கொலீஜியம் அந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்யும். அதற்காக, நியமனத்துக்கு தடை விதிக்கக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இதற்கு முன்பு இதுபோன்ற மனுக்களை கேள்விப்பட்டதும் இல்லை என்று கூறி நியமனத்துக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com