ஆதார் பயோமெட்ரிக்' தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன

ஆதார் அட்டைக்காக மக்களிடம் பெறப்படும் பயோமெட்ரிக்' தகவல்கள் (கைரேகை, கருவிழித்திரை பதிவு) மிகவும் பாதுகாப்பாக உள்ளன என்று மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
ஆதார் பயோமெட்ரிக்' தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன


ஆதார் அட்டைக்காக மக்களிடம் பெறப்படும் பயோமெட்ரிக்' தகவல்கள் (கைரேகை, கருவிழித்திரை பதிவு) மிகவும் பாதுகாப்பாக உள்ளன என்று மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவர் ஆர்.எஸ்.சர்மா தனது ஆதார் எண்ணை சுட்டுரையில் வெளியிட்டு, இதன் மூலம் தனக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமா? என்று சவால் விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவரது புகைப்படம், பிறந்த தேதி, நிரந்தர கணக்கு எண் (பான்) உள்ளிட்ட விவரங்களை இணையதள ஊடுருவல் நபர்கள் (ஹேக்கர்கள்) வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். எனினும், இத்தகவல்கள் மூலம் தனக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று ஆர்.எஸ்.சர்மா கேள்வியெழுப்பினார். இதனிடையே, அவரது வங்கிக் கணக்கை சிலர் ஹேக்' செய்து, ஒரு ரூபாயை டெபாசிட் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து, ஆதார் தகவல்களின் பாதுகாப்பு குறித்து, மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து, மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஆதார் அட்டைக்காக மக்களிடம் பெறப்படும் பயோமெட்ரிக்' தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) தகவல் தொகுப்பை யாரேனும் தவறாக பயன்படுத்தியதாக இதுவரை எந்த சம்பவமும் நிகழவில்லை. டிராய்' தலைவர் விவகாரத்தில் வெளியான சில தகவல்கள் உண்மையல்ல. இதுதொடர்பாக யுஐடிஏஐ ஏற்கெனவே ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆதார், நேரடி மானியத் திட்டம் ஆகியவற்றின் வாயிலாக இடைத்தரகர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் பணம் ரூ.90,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்றார் ரவிசங்கர் பிரசாத்.
700 இணையதள பக்கங்கள் முடக்கம்: இதனிடையே, முகநூல் (ஃபேஸ்புக்), சுட்டுரை (டுவிட்டர்), கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) போன்ற சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படுவது தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து, ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
சமூக ஊடங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க தொழில்நுட்ப ரீதியிலான தீர்வு தேவைப்படுகிறது. இந்த விவகாரத்தில், சமூக ஊடக நிறுவனங்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இதனை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், நிகழாண்டு தொடக்கம் முதல் இதுவரை சுமார் 700 இணையதள பக்கங்களை முகநூல், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் முடக்கியுள்ளன என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com