ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்ல அனுமதி பெற வேண்டும்: சல்மான் கானுக்கு நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

ஜோத்பூர் அருகே உள்ள கண்காணி கிராமத்தில் கடந்த 1998-ஆம் ஆண்டு மான் வேட்டையில் ஈடுபட்டதாக, நடிகர் சல்மான் கான் மீது குற்றம் சாட்டப்பட்டது. 
ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்ல அனுமதி பெற வேண்டும்: சல்மான் கானுக்கு நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அருகே உள்ள கண்காணி கிராமத்தில் கடந்த 1998-ஆம் ஆண்டு மான் வேட்டையில் ஈடுபட்டதாக,  நடிகர் சல்மான் கான் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த விசாரணை நீதிமன்றம், சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஏப்ரலில் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, ஜோத்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார். இதனிடையே, அவர் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுக்குச் செல்லும்போது நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பயண அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் சல்மான் கான் மனு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனு, நீதிபதி சந்திர குமார் சோன்காரா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பி.ஆர்.பீஷ்னோய், சல்மான் கான் மீதான வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், பயண அனுமதி பெறுவதில் அவருக்கு விலக்கு அளிக்கக் கூடாது என்று வாதிட்டார்.

இதையடுத்து,  சல்மான் கான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மகேஷ் போரா வாதிடுகையில், "ஏற்கெனவே சல்மான் கானுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட 2 வழக்குகளில்,  இதே மாதிரியான ஆதாரங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. எனவே, இந்த வழக்கிலும் அவரை குற்றவாளியாக அறிவிக்க முடியாது'' என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சல்மான் கான் வெளிநாடு பயண அனுமதி கோரிய மனு மீதான உத்தரவை சனிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், மான் வேட்டை வழக்கில் சிக்கியுள்ள ஹிந்தி நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என ஜோத்பூர் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com