ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்? மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தகவல்

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தான் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என அம்மாநிலத்தின் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்? மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தகவல்

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தான் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என அம்மாநிலத்தின் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சியனர் கடுமையான கள பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அந்த கட்சியில் இருக்கும் மிகப் பெரிய பின்னடைவே கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தான். 

ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையே முதல்வர் வேட்பாளருக்கான கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால், காங்கிரஸ் கட்சியினரே அசோக் கெலாட் ஆதரவாளர்கள், சச்சின் பைலட் ஆதரவாளர்கள் என இரு பிரிவுகளாக பிரிந்து தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். 

அண்மையில், முன்னாள் மத்திய அமைச்சர் லால் சந்த் கடாரியா அசோக் கெலாட்டை முதல்வர் வேட்பாளராக பொதுவெளியில் அறிவித்தார். இது காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், 

"காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது மக்கள் மத்தியில் தேர்தலுக்கு முன் அறிவிக்கப்படாது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அனைத்து தலைவர்களின் முயற்சிகளுடன் மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளோம்.

ராஜஸ்தான் மக்கள் காங்கிரஸ் அரசை தேர்ந்தெடுக்கும் மனநிலைக்கு வந்துள்ளனர். அதனால், தேர்தலுக்கு பின்னரே முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் ஒரு சில செய்திகள் வருகின்றன. அதனால், நான் இதை கூற விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் யாருக்கும் கட்சியில் பதவியோ அல்லது தேர்தலில் வேட்பாளராகவோ இடம்பெற வாய்ப்புகள் வழங்கப்படாது. 

இன்னும் 8 முதல் 10 நாட்களில் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் கள நிலவரங்கள் வரவுள்ளது. அதன்பிறகு பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி குறித்து கட்சி முடிவு செய்யும்" என்றார். 

தேர்தலுக்கு பிறகு முதல்வர் வேட்பாளர் முடிவு செய்யப்படும் என்ற காங்கிரஸின் முடிவு வரவேற்கத்தக்கதாகவே அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகிறது. காரணம், ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு காங்கிரஸ் கட்சியினருக்கு இந்த தேர்தல் அரிய வாய்ப்பு. அப்படி இருக்கையில், முதல்வர் வேட்பாளரை தற்போதே அறிவித்தால் கட்சிக்குள்ளேயே பிளவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

அது தேர்தல் சமயத்தில் நிச்சயம் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். அதனால், தற்போது ஒரே குறிக்கோளாக தேர்தலை மட்டும் எதிர்கொள்வது என்பது தற்போதைய சூழலில் மிகவும் ஆரோக்கியமான முடிவு. 

மேலும், தேர்தலுக்கு பிறகு கள பணிகளுடைய பலன்கள் முடிவுகள் மூலம் வெளிவரும். அதன் அடிப்படையிலும் கூட, வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று ஒரு சில அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com