தனியார் பள்ளி குழந்தைகளில் 30% பேருக்கு உடல் பருமன் பிரச்னை:  ஆய்வில் தகவல்

மத்திய தில்லியில் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் 30 சதவீதம் பேருக்கு  உடல் பருமன் பிரச்னை இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தனியார் பள்ளி குழந்தைகளில் 30% பேருக்கு உடல் பருமன் பிரச்னை:  ஆய்வில் தகவல்

மத்திய தில்லியில் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் 30 சதவீதம் பேருக்கு  உடல் பருமன் பிரச்னை இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சர் கங்கா ராம் மருத்துவமனை நடத்திய பள்ளி சுகாதார ஆய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
அந்த மருத்துவமனையின் டாக்டர் லலிதா பல்லா மற்றும் அவரது குழுவினர் நடத்திய இந்த ஆய்வின்படி,  குழந்தைகளில் அதிகமானோருக்கு  நீரிழிவு,  ரத்த அழுத்தம்,  தூக்கம் மற்றும் நடத்தையில் குறைபாடுகள் ஆகிய பாதிப்பு இருக்கக் கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.  குறிப்பாக,  இக்குழந்தைகளில் பெரும்பாலானவர்களுக்கு நீரிழிவுக்கு முந்தைய நிலை மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோன்று,  10 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளில் 10 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு குழந்தைகளின் உணவுப் பழக்கமும் காரணம் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பல பள்ளிகளுக்கு, தங்கள் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் ஆரோக்கியமற்ற உணவு உண்ணும் பழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை.  மேலும், பள்ளி கேண்டீன்களில் அதிக கலோரிகள் கொண்ட குளிர்பானங்கள்,  கொழுப்புகள் நிறைந்த ஆரோக்கியமற்ற எண்ணெயில் ஆழ்ந்து வறுக்கப்பட்ட  தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன. 
இந்த விவரங்கள் குறித்து பள்ளிகளுக்கு சுட்டிக்காட்டியவுடன் அவர்கள் உடனடியாக அதை சரி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டள்ளது.
அண்மையில் சர் கங்கா ராம் மருத்துவமனை சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் மக்களவையின் பாஜக கொறடா அனுராக் தாக்கூர்,  கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர்உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
அப்போது சர் கங்கா ராம் மருத்துவமனையின் குறைந்தபட்ச அணுகல்,  வளர்சிதை மற்றும் எடைக்குறைப்பு அறுவைச் சிகிச்சை  மையத்தில் (ஐஎம்ஏஎஸ்)  2010 முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட  1,078 பேரின் முன்னோக்கு பகுப்பாய்வு சமர்ப்பிக்கப்பட்டது.
 இதுகுறித்து ஐஎம்ஏஎஸ் தலைவர் டாக்டர் சுதிர்  கல்ஹன் கூறுகையில், "அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளில் 23 சதவீதம் பேர் தங்களது குழந்தைப் பருவம், வளரிளம் பருவத்தில் உடல் பருமன் இருப்பது கண்டறியப்பட்டது. 
அவர்களுக்கு இருந்த நீரிழிவு,  உயர் ரத்த அழுத்தம்,  தூக்கமின்மை,  மலட்டுத்தன்மை போன்ற மருத்துவக் காரணங்களால் அவர்கள் உடல் எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டனர். உடல் பருமனான குழந்தைகள் அழகாக இருப்பதாகக் கருதப்படுகின்றனர்.  ஆனால், அதுவே அவர்களின் பிற்கால வாழ்க்கையில் உடல் ரீதியிலான பிரச்னைகளுக்கு இட்டுச் செல்ல முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com