2014 முதல் 2018 வரை 5 சுதந்திர தினத்திலும் பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்திய தலைப்பாகை, உடை

அரசு விழாக்கள் மட்டுமல்லாமல் கட்சிப் பொதுக்கூட்டங்கள் முதல் அரசியல் பிரசாரங்கள் வரை பிரதமர் நரேந்திர மோடி, அப்பகுதிகளின் பாரம்பரியத்தை குறிப்பிடும் விதமான தலைப்பாகைகளை பயன்படுத்தி வருகிறார். 
2014 முதல் 2018 வரை 5 சுதந்திர தினத்திலும் பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்திய தலைப்பாகை, உடை

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடியின் ஆடைகள் கவனத்துக்குரியதாகி வருகிறது. குறிப்பாக அவர் பயன்படுத்தும் தலைப்பாகைகள் அவருக்கென தனி ரசிகர்களை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி உடுத்தும் உடைகள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக அதன் விலை தொடர்பாக பலதரப்பட்ட சர்ச்சைகள் அவ்வப்போது எழுகிறது. 

அரசு விழாக்கள் மட்டுமல்லாமல் கட்சிப் பொதுக்கூட்டங்கள் முதல் அரசியல் பிரசாரங்கள் வரை பிரதமர் நரேந்திர மோடி, அப்பகுதிகளின் பாரம்பரியத்தை குறிப்பிடும் விதமான தலைப்பாகைகளை பயன்படுத்தி வருகிறார். அவற்றில் குஜராத்தி முதல் நாகாலாந்து பாரம்பரியம் வரை அனைத்தும் உண்டு.

இந்நிலையில், 72-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, தேசியக் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். மோடி பிரதமராக பதவியேற்று தற்போது 5-ஆவது முறையாக சுதந்திர தினம் கொண்டாடினார். அப்போது அவர் பயன்படுத்திய உடை மற்றும் குறிப்பாக தலைப்பாகை பலரது கவனத்தையும் ஈர்த்தது. 

பிரதமர் நரேந்திர மோடி, இந்த 5 சுதந்திர தினங்களிலும் பயன்படுத்திய தலைப்பாகை குறித்து அறிவோம்:

2018

நடப்பு ஆட்சிப் பொறுப்பின் கடைசியாக 72-ஆவது சுதந்திர தினமான இம்முறை காவி மற்றும் சிவப்பு கலந்த வண்ணத்தினால் ஆன தலைப்பாகை அணிந்திருந்தார். இந்த தலைப்பாகை நீளமாக இருக்கும்படி அணிந்திருந்தார். இந்நிறமானது தைரியத்தையும், தியாகத்தையும் குறிப்பதாகும். அதற்கு இணையாக வெள்ளை நிறத்தினாலான உடை அணிந்திருந்தார்.

2017

இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களை உடைய தலைப்பாகையை அணிந்திருந்தார். அதில் தங்க நிறத்தினாலான ஜரிகை வடிவமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதனுடன் இளங்காவி வண்ணத்தினால் ஆன பந்த்காலா வகை குர்த்தா ஆடையை 71-ஆவது சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக உடுத்தியிருந்தார். இம்முறையும் மிக நீண்ட அளவிலான தலைப்பாகையை அணிந்திருந்தார்.

2016

பிங்க், சிவப்பு மற்றும் மஞ்சள் என கலவையான வண்ணங்கள் அடங்கிய தலைப்பாகையை அணிந்திருந்தார். அதனுடன் வெள்ளை நிற குர்த்தா ஆடையுடன் 70-ஆவது சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏற்றினார்.

2015

இந்த 69-ஆவது சுதந்திர தின விழாவின் போது மஞ்சள் நிறத்தில் சிவப்பு மற்றும் பச்சை நிறத்துடன் கூடிய ஜரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய தலைப்பாகையுடன், குர்த்தா மற்றும் தன்னால் பிரபலமான மோடி ஜாக்கெட் ஆகியவற்றை அணிந்திருந்தார். குர்த்தா பாக்கெட்டில் மூவர்ணத்தினால் ஆன சிறிய அளவிலான துணியை வெளியே தெரியும்படி வைத்திருந்தார். 

2014

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற முதல் சுதந்திர தினமான இந்நாளில் சிவப்பு மற்றும் பச்சை நிறத்துடன் கூடிய ஜோத்பூரியின் பான்தெஜ் வகை தலைப்பாகையை அணிந்திருந்தார். நாட்டின் 68-ஆவது சுதந்திர தினமான அப்போது தனக்கு விருப்பமான வெண்மை நிறத்தினாலான குர்த்தா வகை ஆடையை அணிந்திருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com