வளர்ச்சியின் உச்சத்தில் இந்தியா: சுதந்திர தின உரையில் மோடி பெருமிதம்

தனது தலைமையிலான ஆட்சியில் நாடு பல புதிய சாதனைகளைப் படைத்து வருவதாகவும், வளர்ச்சியில் புதிய உச்சங்களைத் தொட்டு வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் பெருமிதத்துடன்
தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.
தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.


தனது தலைமையிலான ஆட்சியில் நாடு பல புதிய சாதனைகளைப் படைத்து வருவதாகவும், வளர்ச்சியில் புதிய உச்சங்களைத் தொட்டு வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 72-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, புதன்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய பிரதமரின் சுதந்திர தின உரை என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. பிரதமராகப் பதவியேற்ற பிறகு 5-ஆவது முறையாக மோடி சுதந்திர தின உரையாற்றினார். சுமார் 80 நிமிடங்களுக்கு மேல் நீடித்த உரையில் அவர் பேசியதாவது:
நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் உயர்ந்த இலக்கை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இது 2014-ஆம் ஆண்டில் (முந்தைய காங்கிரஸ் அரசில்) சாத்தியமில்லாமல் இருந்தது. முந்தைய ஆட்சியில் இந்தியா குறித்து பல்வேறு எதிர்மறையான கருத்துகளே இருந்தன. சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது, பின்தங்கிவந்த பொருளாதாரம், அரசுப் பணிகளில் தொய்வு உள்ளிட்டவை முந்தைய அரசின் அடையாளங்களாக இருந்தன. அப்போது இந்தியா தூங்கிக் கொண்டிருக்கும் யானையைப் போல இருந்தது. ஆனால், இப்போது அந்த யானை விழித்தெழுந்து பீடு நடைபோட்டு முன்னேறி வருகிறது. 
சமூக நீதி காக்கும் அரசு: தற்போது முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலமும், பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து அளித்ததன் மூலமும் சமூக நீதியை நிலைநாட்டியுள்ளோம். ஏழை எளிய மக்களுக்கு அரசின் திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக கொண்டு சேர்த்துள்ளோம். வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளோம். இளைஞர்கள், மாணவர்கள், மலைவாழ் மக்கள், பெண்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் அரசின் திட்டங்களால் பலன் பெற்றுள்ளனர். இதனால் தேசமே முழு நம்பிக்கையுடன் மிளிர்ந்து வருகிறது. சுதந்திர இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தில் இப்போதுதான் முதல்முறையாக 3 பெண் நீதிபதிகள் உள்ளனர்.
விண்வெளி பயணம்: 2022-ஆம் ஆண்டில் ககன்யான்-1 திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர் அல்லது வீராங்கனையை இந்தியா முதல்முறையாக விண்வெளிக்கு அனுப்பி வைக்க இருக்கிறது. அவர்கள் தேசியக் கொடியை எடுத்துச் சென்று நமது நாட்டின் பெருமையை விண்வெளியிலும் நிலைநாட்டுவார்கள்.
பொருளாதார வளர்ச்சி: அடுத்த 30 ஆண்டுகளில் உலகப் பொருளாதார வளர்ச்சியின் மையமாக இந்தியா உருவெடுக்கும். சீர்திருத்தம், சிறப்பான செயல்பாடு, சீரான வளர்ச்சி ஆகியவையே பொருளாதார வளர்ச்சிக்கான மத்திய அரசின் கொள்கைகளாக உள்ளன. முன்பு இந்தியாவில் தொழில் தொடங்குவது என்றால் அரசுத் துறைகளில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் (ரெட் டேப்) இருந்தன. ஆனால், இப்போது தொழில் தொடங்குபவர்களுக்கு சிவப்பு கம்பள (ரெட் கார்பெட்) வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்தியாவை உலகின் 6 ஆவது பெரிய பொருளாதார சக்தியாக உயர்த்தியுள்ளோம். நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான சரியான முடிவுகளை துணிந்து எடுக்கும் எங்கள் அரசு மூலமே இது சாத்தியமானது.
சட்டமே முதன்மையானது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்துப் பேசிய அவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண் எந்த அளவுக்கு வேதனைக்கு உள்ளாவார் என்பதை நமது சமுதாயம் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற மோசமான தீய செயல்களில் இருந்து நாடு முழுமையாக விடுபட வேண்டும். இந்த விஷயத்தில் சட்டமும், நீதியும்தான் முதன்மையானது. இதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை. குழந்தைப் பருவத்தில் இருந்தே பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். முத்தலாக் என்பது முஸ்லிம் பெண்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. அதனைத் தடுக்க நாடாளுமன்றத்தில் நாம் சட்டம் கொண்டு வந்துள்ளோம். அதனையும் சிலர் (எதிர்க்கட்சிகள்) நிறைவேற்றவிடாமல் தடுக்கின்றனர். ஆனால், நாங்கள் நிச்சயம் பிரச்னைக்கு தீர்வு காண்போம்' என்றார்.
காஷ்மீர் பிரச்னை: ஜம்மு-காஷ்மீர் பிரச்னையில் மத்திய அரசு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறது. முக்கியமாக தேசப்பற்றுமிக்க மக்களை அரசு ஒருபோதும் கைவிடாது. துப்பாக்கிக் குண்டுகளாலும், வெறுப்பூட்டும் பேச்சுகளாலும் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியாது. விரைவில் காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இருக்கிறோம்.
கருப்புப் பண விவகாரம்: ஊழல்வாதிகளையும், கருப்புப் பணத்தை பதுக்குபவர்களையும் இந்த அரசு ஒருபோதும் தப்பிக்கவிடாது. ஏனென்றால் அவர்கள் தேசத்தை அழிக்கும் வேலையைச் செய்கின்றனர். கடந்த 2014-இல் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 4 கோடியாக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 6.75 கோடியாக அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி அமலுக்குப் பிறகு மறைமுக வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. வேளாண் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம் என்றார் மோடி.
முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவெகெளடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அவரது மனைவி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட நீதிபதிகள், அரசு உயரதிகாரிகள், ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியர் செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பாரதியாரின் கவிதையை மேற்கோள் காட்டிய பிரதமர்
மோடி தனது உரையில், எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும்' என்ற மகாகவி பாரதியாரின் கவிதை வரியை தமிழில் கூறி, அதன் அர்த்தத்தை ஹிந்தியில் விளக்கினார். அப்போது, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பாரதியார், இந்தியா குறித்த தொலைநோக்கு பார்வையைக் கொண்டிருந்தார். உலகில் உள்ள அனைத்து விதமான அடிமைத்தளைகளில் இருந்து விடுதலைபெற இந்தியா தீர்வு அளிக்கும் என்று தேசியகவி பாரதியார் முன்பே கூறியுள்ளார்' என்று விளக்கமளித்தார்.


பாரதியின் தேசப்பற்றுமிக்க எழுச்சிக் கவிதைகள் நாட்டு மக்களை, குறிப்பாக இளைஞர்களை எட்ட வேண்டும் என்ற நோக்கில் தனது சுட்டுரைப் பக்கத்திலும் பாரதியாரின் கவிதை வரிகளை மோடி பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com