பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைப்பது தொடர்பான முடிவை தமிழகம் மதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பது பற்றி ஆலோசிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைப்பது தொடர்பான முடிவை தமிழகம் மதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்


புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பது பற்றி ஆலோசிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கக் கோரி கேரள மாநிலம், ஆலுவாவைச் சேர்ந்த ரசூல் ஜாய் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாகக் குறைப்பது குறித்து அணையின் துணைக் கண்காணிப்புக் குழுவும், தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினரும் கலந்தாலோசித்து முடிவெடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும், இரண்டு குழுவும் எடுக்கும் முடிவை தமிழக அரசு மதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தைக் குறைக்கக் கோரிய வழக்கில், மக்களின் பாதுகாப்புக்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். மீட்பு, புனரமைப்பு, மறுவாழ்வு குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற கேரள தலைமைச் செயலாளருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

அணைக்கு வரும் வெள்ள நீர் அளவு மற்றும் திறப்பு குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசாரணையின் போது அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்குக் கீழ்தான் வைத்திருப்போம். திடீரென கூடுதல் நீர் திறப்பைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் தற்போதைய சூழல் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. அணையின் பாதுகாப்புக் குறித்து கருத்துக் கூற நீதிமன்றம் ஒன்றும் நிபுணர் இல்லை. இதுபோன்ற விஷயங்களுக்காக நீதிமன்றத்தை நாடக் கூடாது. நீதிமன்றம் என்பது சட்ட திட்டங்களை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கும் அமைப்பு. இதில் நிபுணத்துவம் கொண்ட விஷயங்களைக் கொண்டு வராதீர்கள் என்றும் நீதிபதிகள் கருத்துக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கு விசாரணையை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com