வாஜ்பாய் மறைவு

பாஜக மூத்த தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சாராது பிரதமர் பதவியை முழுமையாக நிறைவு செய்த முதல் நபர் என்ற பெருமைக்கு உரியவரும்,
வாஜ்பாய் மறைவு

பாஜக மூத்த தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சாராது பிரதமர் பதவியை முழுமையாக நிறைவு செய்த முதல் நபர் என்ற பெருமைக்கு உரியவரும், அரசியல்வாதியாக மட்டும் அல்லாது பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கியவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பல ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட நோய்த் தொற்று காரணமாக கடந்த ஜூன் 11-ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5.05 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர்.
இந்தியாவில் வெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர்களில் முதன்மையானவராக விளங்கிய வாஜ்பாய், கட்சி வேறுபாடுகள் கடந்து எதிர்க்கட்சித் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்; எந்த சூழ்நிலையிலும் நடுநிலை தவறாதவர்; அரசியலில் நேர்மைக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர்; அணுகுமுறையிலும், தோற்றத்திலும் எளியவர் என்று புகழப்பட்டவர்.
காங்கிரஸ் கட்சியைச் சாராமல் பிரதமர் பதவியை 5 ஆண்டுகள் அலங்கரித்த முதல் நபர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் தேசப் பணிக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். அரசியல் தலைவராக மட்டுமல்லாது கவிஞர், பேச்சாளர், இலக்கியவாதி, பத்திரிகையாளராகவும் விளங்கினார். அவரது மறைவு, பாஜகவினரை மட்டுமல்லாது நாட்டு மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
7 நாள் துக்கம்: வாஜ்பாய் மறைவை அடுத்து 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது. வெள்ளிக்கிழமை மத்திய அரசு சார்பில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
வாஜ்பாய் மரணம் தொடர்பாக, அவருக்கு சிகிச்சை அளித்த தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது:
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது வாஜ்பாய்க்கு சிறுநீர்ப் பாதையில் நோய்த் தொற்றும், சளித் தொல்லையும் இருந்தது. தொடர்ந்து, நிமோனியா காய்ச்சல், சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழப்பால் பாதிக்கப்பட்டார். அவர் ஏற்கெனவே கடந்த 2009 ஆம் ஆண்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதயம், நுரையீரல் செயல்பாடும் குறைந்தது. கடைசி நாளில் அவருக்கு உயிர்காக்கும் எக்மோ' சிகிச்சையும் அளிக்கப்பட்டது. எனினும், மாலை 5.05 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 9 வாரங்கள் வரை உடல் நிலை சீராகவே இருந்தது. எனினும், வியாழக்கிழமை அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. உயிர்காக்கும் கருவிகள் கொண்டு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலன் தரவில்லை. அவரது உடல் எம்பாமிங்' முறையில் பதப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றனர்.

பொக்ரான் நாயகன்


அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் கண்காணிப்பையும் மீறி, ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் கடந்த 1998ஆம் ஆண்டில் அணுகுண்டு சோதனை நடத்தி, இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவர் அடல் பிஹாரி வாஜ்பாய்.
மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் கடந்த 1924ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி வாஜ்பாய் பிறந்தார். அவரது தந்தையின் பெயர், கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய், தாயாரின் பெயர் கிருஷ்ணா தேவி ஆகும்.
குவாலியரில் உள்ள விக்டோரியா கல்லூரியில் பட்டப்படிப்பும், கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் பட்டமேற்படிப்பும் முடித்தார். ஆரம்ப காலத்தில் கம்யூனிச கொள்கையில் தீவிர பற்று கொண்டிருந்தாலும், பின்னர் 1947ஆம் ஆண்டு முதல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் முழு நேர தொண்டரானார்.
ஹிந்தி மொழி பத்திரிகைகளான ராஷ்டிரதர்மா மற்றும் பாஞ்சஜன்யாவிலும், நாளிதழ்களான சுதேசி, வீர் அர்ஜூன் ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். பாரதீய ஜனசங்க நிறுவனரான ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தீவிர ஆதரவாளர். காஷ்மீரில் கடந்த 1950ஆம் ஆண்டு இந்திய பயணிகளுக்கு அடையாள அட்டை அளிக்கும் கோரிக்கைக்காக ஷியாமா பிரசாத் முகர்ஜி சாகும்வரை போராட்டம் நடத்தியபோது, அவருடன் வாஜ்பாயும் இருந்தார்.
இந்திய சுதந்திர போராட்டம் உச்சத்தில் இருந்தபோது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டதன் மூலம், 18ஆவது வயதில் அரசியலுக்கு வந்தார் வாஜ்பாய். உத்தரப் பிரதேச மாநிலம், பல்ராம்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு (2ஆவது மக்களவைத் தேர்தல்) கடந்த 1957ஆம் ஆண்டு முதன்முதலில் தேர்வு செய்யப்பட்டார். மக்களவையில் அவரது கன்னிப் பேச்சு, கட்சிகள் வேறுபாடின்றி அனைவராலும் வரவேற்கப்பட்டது.
அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, தன்னைச் சந்தித்த வெளிநாட்டு குழுவினரிடம், வாஜ்பாயை சுட்டிக்காட்டி, இந்த இளைஞர், ஒருநாளில் இந்தியாவின் பிரதமராவார்' என்று அறிமுகப்படுத்திய சொந்தக்காரர். பின்னாளில் இதை நிரூபித்தும் காட்டினார் வாஜ்பாய்.
47 ஆண்டுகால நாடாளுமன்ற வாழ்க்கையில், மக்களவைக்கு 10 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமராக கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரையிலும் 3 முறை பதவி வகித்துள்ளார். 
இதில் முதல்முறை கடந்த 1996ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற வாஜ்பாய், 13 நாளில் ராஜிநாமா செய்தார். இதையடுத்து 1998ஆம் ஆண்டு மீண்டும் பிரதமராக பதவியேற்ற வாஜ்பாய், 13 மாதங்கள் அப்பதவியை வகித்தார். மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அவரது அரசு 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்பின்னர், 1999ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் பிரதமராக பதவியேற்ற வாஜ்பாய், முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தார். இதன்மூலம், 5 ஆண்டுகால ஆட்சியையும் பூர்த்தி செய்த காங்கிரஸ் கட்சியை சேராத முதல் பிரதமர் என்று வாஜ்பாய் பாராட்டப்பட்டார்.
வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்த காலத்தில், ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது, நாடாளுமன்றத்தின் மீது 2001ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது, குஜராத்தில் 2002ஆம் ஆண்டு கலவரம் மூண்டது, கார்கில் போர் போன்ற பல்வேறு பிரச்னைகளை அவரது அரசு எதிர்கொண்டது. 2ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றபிறகு, பொக்ரானில் கடந்த 1998ஆம் ஆண்டு மே மாதம் அணுகுண்டு சோதனைக்கு வாஜ்பாய் உத்தரவிட்டார். இதேபோல், பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், 
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு நேரடி பேருந்து சேவையை 1999ஆம் ஆண்டு தொடங்கி வைத்து, அதன் முதல் பேருந்தில் லாகூருக்கு பயணம் செய்தார். பாகிஸ்தானில் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீஃபையும் சந்தித்துப் பேசினார்.
2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வியை சந்தித்தது. இதற்கடுத்த 2005ஆம் ஆண்டில் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சிறந்த தலைவர், நடைமுறைவாதி, சொற்பொழிவாளர், கவிஞர், இலக்கியவாதி, மிதவாதி, பத்திரிகையாளர் ஆகிய பன்முகத் தன்மை கொண்டவர். அவரது சேவையை பாராட்டி, இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா கடந்த 2015ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. வாஜ்பாய்க்கு நமிதா கௌல் பட்டாச்சார்யா என்ற வளர்ப்பு மகள் உள்ளார்.

ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் இன்று இறுதிச் சடங்கு
வாஜ்பாயின் இறுதிச் சடங்கு தில்லியில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. அவருடைய உடல் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லம் அமைந்துள்ள எண்: 6ஏ, கிருஷ்ண மேனன் மார்க்கிற்கு வியாழக்கிழமை இரவு எடுத்துச் செல்லப்பட்டது.
இது தொடர்பாக பாஜக தலைவர் அமித் ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், வாஜ்பாயின் உடல் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு, காலை 9 மணிக்கு பாஜக தலைமையகத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்படும். மாலை 4 மணிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட உள்ளது' என்றார்.

தலைவர்கள் அஞ்சலி

தில்லியில் வாஜ்பாய் உடலுக்கு வியாழக்கிழமை மரியாதை செலுத்தும் (இடமிருந்து) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, பாஜக மூத்த தலைவர் அத்வானி.
தில்லியில் வாஜ்பாய் உடலுக்கு வியாழக்கிழமை மரியாதை செலுத்தும் (இடமிருந்து) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, பாஜக மூத்த தலைவர் அத்வானி.

ராம்நாத் கோவிந்த்: முன்னாள் பிரதமரும், முதுபெரும் அரசியல் தலைவருமான வாஜ்பாயின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்துள்ளேன். நற்பண்புகள் நிறைந்த அவரது மறைவு, நம் அனைவருக்கும் பேரிழப்பு.

வெங்கய்ய நாயுடு: சுதந்திர இந்தியாவில் வலிமையான தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் வாஜ்பாய். 23 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, வெற்றிகரமாக ஆட்சி செய்தவர். தனது கடமை உணர்வாலும், தலைமைப் பண்பாலும் எந்நாளும் நினைவுகூரப்படுவார்.

நரேந்திர மோடி: பாஜக மூத்த தலைவரான வாஜ்பாய், இந்த தேசத்துக்காகப் பாடுபட்டவர். அவர் தனது தலைமைப் பண்பால், 21-ஆம் நூற்றாண்டில் வலிமையான, வளமான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா உருவாவதற்கு அடித்தளமிட்டவர். என்னைப் போன்ற செயல் வீரர்களுக்கு ஊக்கசக்தியாக வாழ்ந்து காட்டியவர். அவர் நாடு முழுவதும் பயணம் செய்து பாஜகவின் கொள்கைகளைப் பரப்பினார்.

பிரணாப் முகர்ஜி: எதிர்க்கட்சியில் இருந்த மதிப்புமிக்க தலைவர் வாஜ்பாய். கருத்தொற்றுமையை ஏற்படுத்திய பிரதமர். அவரது மறைவு மூலம் தனது பெருமகனை இந்தியா இழந்துள்ளது.

அத்வானி: வாஜ்பாய் உடனான எனது நீண்டகால அனுபவங்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். எனது 65 ஆண்டுகால நண்பனை இழந்துவிட்டேன்.

மன்மோகன் சிங்: வாஜ்பாய் சிறந்த பேச்சாளர், கவிஞர், பொது சேவகர், நிகரில்லா நாடாளுமன்றவாதி, மாபெரும் பிரதமர் என பல அடையாளங்களைக் கொண்டவர்.

ராகுல் காந்தி: இந்தியா ஒரு மாபெரும் புதல்வனை இழந்து விட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், லட்சக்கணக்கான மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட ஒரு தலைவர் ஆவார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com