கேரளா வெள்ளம்: 10,000 பேரை பத்திரமாக வெளியேற்றியுள்ளதாக என்டிஆர்எஃப் தகவல்

கேரள மாநிலத்தில் கன மழை மற்றும் கடும் வெள்ள பாதிப்பு பகுதிகளிலிருந்து இதுவரை சுமார் 10,000 பேரை பத்திரமாக வெளியேற்றியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) கூறியுள்ளது.
கேரளா வெள்ளம்: 10,000 பேரை பத்திரமாக வெளியேற்றியுள்ளதாக என்டிஆர்எஃப் தகவல்

கேரள மாநிலத்தில் கன மழை மற்றும் கடும் வெள்ள பாதிப்பு பகுதிகளிலிருந்து இதுவரை சுமார் 10,000 பேரை பத்திரமாக வெளியேற்றியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) கூறியுள்ளது.

இதுதொடர்பாக என்டிஆர்எஃப் செய்தித் தொடா்பாளர் ஒருவர் கூறியதாவது:

"கேரளத்தில் மழை, வெள்ள மீட்புப் பணிகளுக்காக இதுவரை 58 பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 55 குழுக்கள் களத்தில் பணியாற்றி வரும் நிலையில், 3 குழுக்கள் அந்த மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளன.

இதில் ஒவ்வொரு குழுவிலும் 35 முதல் 40 வீரர்கள் இருப்பார்கள். ஓர் மாநிலத்தில் இத்தகைய எண்ணிக்கையிலான மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். அதேபோல், நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளிலேயே இதுதான் மிகப்பெரிய மீட்புப் பணியாகும். கேரளத்தில் இதுவரை ஆபத்தான பகுதிகளில் இருந்து 194 நபர்களையும், 12 விலங்குகளையும் என்டிஆர்எஃப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். 

அதுதவிர, மொத்தமாக 10,467 பேரை வெள்ள பாதிப்புப் பகுதிகளில் இருந்து பத்திரமாக வெளியேற்றியுள்ளனர். காயமடைந்த 159 பேருக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் திரிச்சூரில் 15, பத்தனம்திட்டாவில் 13, ஆலப்புழைவில் 11, எர்ணாகுளத்தில் 5, இடுக்கியில் 4, மலப்புரத்தில் 3, வயநாடு, கோழிக்கோட்டில் தலா 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 435 என்டிஆர்எஃப் படகுகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் மூலமாக, 24 மணி நேரமும் மீட்புப் பணிகள் கண்காணிக்கப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன" என்றார். 

இதனிடையே, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, அதி விரைவுப் படையிலிருந்து 5 படைப் பிரிவு வீரர்கள் கேரளம் முழுவதுமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக ராணுவ, விமான, கடற்படை வீரர்களும் களத்தில் உள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் 38 ஹெலிகாப்டர்களும், நிவாரணப் பொருள்களை கொண்டு செல்ல 20 விமானங்களும் பயன்பாட்டில் உள்ளன. 

ராணுவம் சார்பில் 10 படைப் பிரிவுகள், பொறியியல் அதிரடிப் படையினரைக் கொண்ட 10 குழுக்கள், பயிற்சி பெற்றற 790 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கடற்படை சார்பில் 82 குழுக்களும், கடலோர காவல்படை சார்பில் 42 குழுக்கள், 2 ஹெலிகாப்டர்கள், 2 கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com