சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல்: அஞ்சலி செலுத்தச் சென்ற போது சம்பவம்

தில்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தச் சென்ற சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் (79) சிலரால்
பாஜக தலைமையகத்துக்கு வந்த சமூக ஆர்வலர் ஸ்வாமி அக்னிவேஷை விரட்டும் தொண்டர்கள்.
பாஜக தலைமையகத்துக்கு வந்த சமூக ஆர்வலர் ஸ்வாமி அக்னிவேஷை விரட்டும் தொண்டர்கள்.


தில்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தச் சென்ற சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் (79) சிலரால் தாக்கப்பட்டார். தன்னை பாஜகவைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாக அக்னிவேஷ் புகார் தெரிவித்துள்ளார்.
தில்லி தீன தயாள் உபாத்யாய் மார்க்கில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்ற சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷை சிலர் கேலி செய்து தாக்குவது போன்ற விடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. 
இதுகுறித்து அக்னிவேஷ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாஜக தலைமையகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அப்போது, 20 முதல் 30 பாஜக தொண்டர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு தள்ளிவிட்டனர். என்னுடைய தலைப்பாகை கீழே விழுந்தது. என்னைத் துரோகி என்று அவர்கள் கூறினர். 
ஆபாசமாகவும் திட்டினர். அப்பகுதியில் போலீஸார் சிலர் நின்றுகொண்டிருந்த போதிலும், பெண்கள் உள்ளிட்ட அந்த நபர்கள் செருப்பைக் காண்பித்து ஆபாசமாகத் திட்டி கேலி செய்தனர். 
நான் பாஜக தலைமையகத்திற்குச் செல்வதற்கு முன்பு பாஜக தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் கூறியிருந்தேன். இதனால், என் மீதான தாக்குதல் தொடர்பாக முறையாக போலீஸில் புகார் அளிக்க உள்ளேன். இதற்கு முன்பும் நான் தாக்கப்பட்டுள்ளேன். 
ஆனால், புகாருக்குள்ளான நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. வன்முறையும், சகிப்பின்மைச் சூழலும் நிலவுகிறது' என்றார்.
கடந்த மாதம் அக்னிவேஷ் ஜார்க்கண்டில் உள்ள பக்கூர் பகுதிக்குச் சென்றிருந்த போது பாஜக இளைஞர் மோர்ச்சா (பிஜேஒய்எம்) அமைப்பினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்ககது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com