கேரள பேரிடருக்கு தொழிலதிபர்கள் உதவ வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு தொழிலதிபர்களை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு வலியுறுத்தியுள்ளார். மேலும், கேரளத்துக்கு செல்லும் அனைத்து


கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு தொழிலதிபர்களை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு வலியுறுத்தியுள்ளார். மேலும், கேரளத்துக்கு செல்லும் அனைத்து உள்நாட்டு விமானங்களிலும் கட்டணமின்றி சரக்குகளைக் கொண்டு செல்லலாம் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு திங்கள்கிழமை கூறியதாவது:
கேரளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் அவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை. கேரளத்துக்கு நிவாரண நிதி அளித்தோ, மீட்பு பணிகளுக்கு உதவி செய்வதன் மூலமாகவோ அரசியல் செய்யும் எண்ணும் எங்களுக்கு இல்லை. நிவாரணத்துக்கு தேவையானதை திரட்டி அதில் எங்களது முத்திரையை பதிப்பதால் ஒரு பயனும் இல்லை. மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அவர்களுக்கு தேவையானதை செய்ய விரும்புகிறோம். 
தொழில் கூட்டமைப்புகளில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு, வர்த்தக அமைச்சகத்தின் கீழ் வரும் தொழிற்கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை செயலரிடம் அறிவுறுத்தியுள்ளோம். 
பல்வேறு தொண்டு நிறுவனங்களும் கேரள மக்களுக்கு உதவி புரிய முன் வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்று அவர் கூறினார்
உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சகராகவும் உள்ள சுரேஷ் பிரபு விமானப் போக்குவரத்து பற்றி கூறுகையில், முகாம்களில் உள்ள மக்களுக்கு அனுப்பும் நிவாரணப் பொருள்களை விமானங்களில் கட்டணம் இன்றி அனுப்பலாம். 
ஆனால் அந்த பொருள்களை பெற்றுக் கொள்ள அங்கு ஒருவர் இருக்க வேண்டும். கேரள மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், கொச்சி கடற்படை விமான தளத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட உள்ளன. கேரள மாநிலம் இந்த பேரிடரில் இருந்து மீண்டு வர எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com