கேரளாவுக்கு ரூ.600 கோடி நிவாரண நிதியை விடுவித்து மத்திய அரசு நடவடிக்கை

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு அறிவித்த ரூ.600 கோடி செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டது.
கேரளாவுக்கு ரூ.600 கோடி நிவாரண நிதியை விடுவித்து மத்திய அரசு நடவடிக்கை

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு அறிவித்த ரூ.600 கோடி செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் உடனடி ரூ.500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும் மழை சார்ந்த இடர்பாடுகளில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக, பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த ரூ.100 கோடி நிதி மற்றும் பிரதமர் மோடி அறிவித்த ரூ.500 கோடி நிதியுதவி ஆகியவை செவ்வாய்கிழமை விடுவித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், கேரளாவுக்கு 89,540 மெட்ரிக் டன் அரிசியை கூடுதலாக ஒதுக்கீடு செய்தது மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அறிவித்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் சார்பில் கேரளாவுக்கு ரூ.25 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1 கோடி குளோரின் மாத்திரைகள் உட்பட 65 மெட்ரிக் டன் மருந்துகள் திருவனந்தபுரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மேலும், கேரள வெள்ள பாதிப்புகளுக்காக திபெத் பௌத்த மதகுரு தலாய் லாமா ரூ.11 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

முன்னதாக, கேரள அரசுக்குத் தேவையான நிவாரணப் பொருள்கள் மற்றும் உணவு தானியம், மருந்து பொருள்கள் ஆகியவை தேவைக்கேற்ப வழங்கப்படும் என்று மோடி உறுதியளித்திருக்கிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதான தேசிய நெடுஞ்சாலைகளைச் சீரமைப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் பாதைகளை சீரமைப்பதில் கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என தேசிய அனல் மின்நிலையம் மற்றும் தேசிய மின்சார கட்டுமானக் கழகம் ஆகிய மத்திய அரசு நிறுவனங்களை மோடி வலியுறுத்தியிருக்கிறார்.

வெள்ளத்தில் குடிசைகளை இழந்த கிராமப்புற மக்களுக்கு, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்படி முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கட்டித் தரப்படும்.மத்திய அரசின் நிகழாண்டு பட்ஜெட்டில், ஊரக வேலை உறுதித் திட்டத்தின்படி கேரள மாநிலத்துக்கு 5.5 கோடி நபர்களுக்கான வேலை நாள்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. 

கூடுதல் வேலை நாள்களை ஒதுக்குமாறு கேரள அரசு கோரிக்கை விடுத்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும். மத்திய அரசின் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கேரள விவசாயிகள் மீண்டும் பயிர் செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com