கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதியுதவி அளித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் : பினராயி விஜயன் தகவல்

வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரூ.700 கோடியை நிதியுதவியாக அளித்திருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதியுதவி அளித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் : பினராயி விஜயன் தகவல்


திருவனந்தபுரம்: வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரூ.700 கோடியை நிதியுதவியாக அளித்திருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

நிவாரணப் பணிகள் மற்றும் நிதியுதவி குறித்து திருவனந்தபுரத்தில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட சபாநாயகருக்கு வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்படும். கேரளாவில் மீட்புப் பணிகள், நிவாரணம், மறுசீரமைப்பு குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி ரூ.500 கோடியை கேரள மாநிலத்துக்கு அறிவித்திருந்தார். கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் ரூ.2600 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, ரூ.2,600 கோடி அளவுக்கு நிவாரண உதவிகள் தேவைப்படுகிறது. நிவாரண நிதி கேட்டு ஆகஸ்ட் 30ம் தேதி சிறப்பு பிரதிநிதிகளுடன் தில்லி செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் பினராயி விஜயன்.

நிவாரண முகாம்கள் பற்றி அவர் பேசுகையில், வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் நிவாரண முகாம்களில் உள்ள மக்கள் படிப்படியாக வீடு திரும்புவர் என்றும் தெரிவித்தார்.

அதோடு, இந்தியாவில் இருந்து குவியும் நிதியுதவிகளைக் கண்டு நெஞ்சம் நெகிழ்கிறது. அனைத்து மாநில அரசுகளும் கேரளாவுக்கு உதவி செய்து வருகின்றன.

வளைகுடா நாடுகளில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளில் வெள்ளம் வந்தது போல உணர்கிறார்கள். அபுதாபி அரசர் தினசரி தொடர்பு கொண்டு வெள்ள நிலைமைகளைக் கேட்டறிகிறார். வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரூ.700 கோடியை நிதியுதவியாக அளித்துள்ளது. உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்கள் தாராளமாக நிதி உதவி அளித்து வருகின்றனர் என்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com