தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, தமிழக காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான சம்பவம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, தமிழக காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. 
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. 
மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகள் அக்டோபர் 8-ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் இயங்கிவரும் சிபிஐ புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பாக புதிதாக 12 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
இதில் புகார்தாரராக தூத்துக்குடி சிறப்பு வட்டாட்சியர் (தேர்தல்) பி.சேகர் சேர்க்கப்பட்டுள்ளார். 
இதில் சட்டவிரோதமாக கூட்டமாக கூடுதல், வன்முறையில் ஈடுபடுதல், அரசு சொத்தை சேதப்படுத்துதல், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், கொலை முயற்சியில் ஈடுபடுதல், பெட்ரோல் குண்டு வீசுதல், கொடுமையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல், வீடுகளைச் சேதப்படுத்துதல், இயற்கைக்கு மாறான மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 12 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேல்முறையீடு: இந்நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. 
அதில், இந்த வழக்கு விசாரணையை தமிழக காவல் துறையின் சிபிசிஐடி பிரிவே தொடர்ந்து மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. 
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே. கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது, சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி முறையிட்டார். 
இதற்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டியுள்ளது என்று கூறி, தமிழக அரசின் மனு மீது சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடரும் என்றும் இந்த வழக்கு 4 வாரங்களுக்குப் பின் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com