எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பலப்படுத்த கேஜரிவாலுக்கு ஸ்டாலின் அழைப்பு

மதவாத சக்திகளுக்கு எதிராக அணி திரளும் வகையில், வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பலப்படுத்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு


மதவாத சக்திகளுக்கு எதிராக அணி திரளும் வகையில், வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பலப்படுத்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு மு.க.ஸ்டாலின் தில்லி முதல்வர் கேஜரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
மத்தியில் மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்கும் வகையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கு, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பலப்படுத்துவது மட்டுமே ஒரே வழி என ஸ்டாலின் கேஜரிவாலிடம் கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சி மீதுள்ள கருத்து வேறுபாடுகளைத் தள்ளி வைத்துவிட்டு, மதவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றிணையும் வகையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணையுமாறு கேஜரிவாலை ஸ்டாலின் கேட்டுக் கொண்டார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மு.க. ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, சென்னையில் நடைபெறவுள்ள மு.கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வரும்படி அவருக்கு அழைப்பிதழை அளித்தார். இதனிடையே, திமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்து வந்த கேஜரிவால், எந்த அடிப்படையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துள்ளார் என்று தில்லி பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com