காஷ்மீர்: பிரிவினைவாதிகள் முழு அடைப்புப் போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாகக் கூறி பிரிவினைவாத
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி காஷ்மீரில் பிரிவினைவாதிகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தால் வெறிச்சோடிய ஸ்ரீநகரின் முக்கிய கடைவீதி.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி காஷ்மீரில் பிரிவினைவாதிகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தால் வெறிச்சோடிய ஸ்ரீநகரின் முக்கிய கடைவீதி.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாகக் கூறி பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக ஸ்ரீநகரில் பெரும்பாலான கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், வணிக, வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. 
பொது மக்களின் வாகனப்போக்குவரத்து கடும் பாதிப்படைந்த நிலையில் தனியார் கார்கள் மற்றும் ஆட்டோக்கள் மட்டும் நகரின் சில இடங்களில் இயங்கின. 
இதேப்போல, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பிற மாவட்டத் தலைநகரங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. 
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற போதிலும் மக்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இருப்பினும், பாதுகாப்புப் படையினர் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தீவிர ரோந்து சென்று சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் கண்காணிப்பில் ஈடுபட்டனர் என்றனர். 
பிரிவினைவாதிகளின் கூட்டு நடவடிக்கைக்குழு தலைவர்களான சையது அலி ஷா கிலானி, மிர்வாய்ஸ் உமர்ஃபாரூக் மற்றும் முகம்மது யாசின் மாலிக் ஆகியோர், மனித உரிமைகள் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து, முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்திருந்தனர். மேலும், காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதை கண்டிக்கும் வகையில் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபடவும், சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்கள் இங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com