தெலங்கானாவில் ஆட்சியமைக்க டிஆர்எஸ் கட்சிக்கு ஆதரவா?: பாஜக பதில்

தெலங்கானாவில் ஆட்சியமைப்பதற்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிக்கும் திட்டத்தை தங்கள் கட்சி கைவிடவில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.


தெலங்கானாவில் ஆட்சியமைப்பதற்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிக்கும் திட்டத்தை தங்கள் கட்சி கைவிடவில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஹைதராபாதில் அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ், பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டி வருமாறு:
தெலங்கானா தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட பெரும்பாலான வாக்கு கணிப்புகள், மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என்றே தெரிவிக்கின்றன. தெலங்கானாவில் காங்கிரஸ், மஜ்லீஸ் கட்சியுடன் பாஜக எந்த தொடர்பும் வைக்காது. அதேவேளையில் தெலங்கானாவில் நிலையான அரசு அமைய வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.
தேர்தலில் ஒருவேளை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு சட்டப்பேரவை அமையும்பட்சத்தில், எங்களிடம் எந்த கட்சி ஆதரவு கேட்கிறது என்று முதலில் பார்ப்போம். நிச்சயம் காங்கிரஸ், மஜ்லீஸ் கட்சிக்கு பாஜக ஆதரவளிக்காது.
தெலங்கானா தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற போகிறது, கட்சிக்கு கிடைக்கும் வாக்கு விகிதம் எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை காண ஆவலுடன் உள்ளோம்.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், டிஆர்எஸ் ஆகிய 2 கட்சிகளையும் எதிர்த்து பாஜக போட்டியிட்டது. எனவே எதிர்க்கட்சியாக செயல்படும் வாய்ப்பு கிடைத்தாலும், பாஜக மகிழ்ச்சியுடன் ஏற்கும். அப்போது ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயல்படும் என்றார் ஜி.வி.எல். நரசிம்ம ராவ்.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. அதாவது, டிஆர்எஸ்-மஜ்லீஸ் கட்சி ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ்-தெலுங்கு தேசம்-இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் 2ஆவது அணியாகவும் போட்டியிட்டன. 
பாஜக 3ஆவது அணியாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் 4ஆவது அணியாகவும் போட்டியிட்டன.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கு கணிப்புகளில் பெரும்பாலானவை, டிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என்று தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com