வாஜ்பாய் உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல்: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை


முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற இருஅவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இக்கூட்டத் தொடரின் முதல்நாளான செவ்வாய்க்கிழமை மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்களவையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த மக்களவை தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, மறைந்த மத்திய அமைச்சர் அனந்த் குமார், போலா சிங், ஷா நவாஸ், முகம்மது அஸ்ருல் ஹேக் ஆகிய 3 மறைந்த எம்.பி.க்கள் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். வாஜ்பாய் குறித்து அவர் பேசுகையில்,மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் அவர் ஒருவர், அரசியல் வேறுபாடுகளின்றி அனைவராலும் மதிக்கப்பட்டவர் என்று புகழாரம் சூட்டினார். இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவையில் இருந்தனர்.
மக்களவை அலுவல் தொடங்கும் முன்பு, பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கும் இருப்பிடத்துக்கு சென்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் தேவே கௌடா, சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
மாநிலங்களவையிலும் மறைந்த தலைவர்கள், மறைந்த எம்.பி.க்கள், மறைந்த முன்னாள் எம்.பி.க்கள், ஒடிஸா, ஆந்திரம், தமிழகம் ஆகிய 3 மாநிலங்களில் கஜா புயலில் உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, நாட்டுக்கு வாஜ்பாய் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்தார். மறைந்த மத்திய அமைச்சர் அனந்த் குமார் பற்றி பேசுகையில், வெங்கய்ய நாயுடு மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்.
அவையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையை வெங்கய்ய நாயுடு நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com