அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு: 31-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கும்,

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கும், பதிவேடு தொடர்பான ஆட்சேபத்தை தெரிவிப்பதற்குமான அவகாசத்தை வரும் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
அஸ்ஸாமில் உண்மையான இந்தியக் குடிமக்களை கண்டறிவதற்காக மத்திய அரசு கடந்த ஜூலை 30-ஆம் தேதி தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான வரைவுப் பட்டியலை வெளியிட்டது. அதில், அஸ்ஸாம் மக்கள் தொகையில் 2.89 கோடி பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 40.70 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
விடுபட்டவர்களில் சுமார் 37.59 லட்சம் பேரின் பெயர்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், சுமார் 2.48 லட்சம் பேரின் பெயர்கள் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்கள் பெயர்களை சேர்ப்பதற்கும், ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்குமான அவகாசத்தை டிசம்பர் 15-ஆம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று அஸ்ஸாம் மாநில அரசு சார்பில் கோரப்பட்டது.
அதன் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பதிவேட்டில் விடுபட்டவர்களில் 14.28 லட்சம் பேர் தங்களை சேர்ப்பதற்கான கோரிக்கை மற்றும் ஆட்சேபங்கள் தொடர்பான விண்ணப்பங்களை அளித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக விண்ணப்பம் அளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
அந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, விண்ணப்பங்களுக்கான அவகாசத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. அத்துடன், விண்ணப்பங்களை சரிபார்ப்பதற்கான அவகாசத்தையும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதியிலிருந்து, பிப்ரவரி 15-ஆம் தேதிக்கு நீட்டித்தது. 
அப்போது ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், பதிவேட்டில் விடுபட்டோர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது சட்டரீதியாக செல்லுபடியாகக் கூடிய ஆவணங்களை அளித்தாலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அதிகாரிகள் அதை ஏற்பதில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, சட்டரீதியாக செல்லுபடியாகக் கூடிய அனைத்து ஆவணங்களையும் என்ஆர்சி அதிகாரிகள் ஏற்க வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு அறிவுறுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com