முதல்வர்கள் யார்?: காங்கிரஸில் குழப்பம்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முதல்வர்களைத் தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களிலும்
முதல்வர்கள் யார்?: காங்கிரஸில் குழப்பம்


மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முதல்வர்களைத் தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வரைத் தேர்வு செய்வதற்கான அதிகாரத்தை கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் அளிக்க எம்எல்ஏக்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டாலும், அங்கு முதல்வர் வேட்பாளர்களாக யாரையும் முன்கூட்டியே காங்கிரஸ் அறிவிக்கவில்லை. 
இப்போது, வெற்றிக்கனியை காங்கிரஸ் பறித்துள்ள நிலையில், அங்கு முதல்வராக யாரைத் தேர்வு செய்வது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. ஏனெனில், மூன்று மாநிலங்களிலுமே முதல்வர் பதவியைப் பெற அந்த மாநிலத் தலைவர்கள் இடையே போட்டி உள்ளது.
ராஜஸ்தான்: ராஜஸ்தானில் கட்சியின் மாநிலத் தலைவர் சச்சின் பைலட், முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. இதில் இளம் தலைவரான சச்சின் பைலட், ராகுலிடம் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பெற்றவர். எனினும், கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், அசோக் கெலாட் முதல்வராக வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிகிறது.
மத்தியப் பிரதேசம்: தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் பெரிய மாநிலமான மத்தியப் பிரதேசத்தைப் பொருத்தவரையில் மூத்த தலைவரான கமல்நாத்துக்கும், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே முதல்வர் பதவிக்கு போட்டியுள்ளது. இது தவிர, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்கும் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளதாகத் தெரிகிறது. இதில் கமல்நாத்துக்கு எம்எல்ஏக்கள் மத்தியில் ஆதரவு அதிகம் இருப்பதாகவும், திக்விஜய் சிங் கூட கமல்நாத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாகவும் அந்த மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் ஜோதிராதித்ய சிந்தியா, ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது முதல்வர் பதவிக்கான போட்டியில் அவருக்கான கூடுதல் பலமாகும்.
சத்தீஸ்கர்: 90 தொகுதிகளில் 68 இடங்களில் காங்கிரஸ் வென்று பாஜகவை படுதோல்வியடையச் செய்த மாநிலமான சத்தீஸ்கரில் முதல்வர் பதவிக்கான போட்டியில் 4 பேர் உள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாஹல், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த டி.எஸ். சிங் தியோ, முன்னாள் மத்திய அமைச்சர் சரண் தாஸ் மஹத், சத்தீஸ்கர் மாநில எம்.பி. தம்ரத்வாஜ் சாஹு ஆகியோர் இடையே போட்டி உள்ளது. இதில் பூபேஷ், டி.எஸ். சிங் தியோ ஆகியோரில் ஒருவர் முதல்வராக அதிக வாய்ப்பு உள்ளதாக சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் தியோ, அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். 4-ஆவது முறையாக எம்எல்ஏ ஆகியுள்ள பூபேஷ், மத்தியப் பிரதேச மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார்.
மூன்று மாநிலங்களிலுமே காங்கிரஸ் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் யார் என்பது குறித்து முடிவெடுப்பதில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதையடுத்து, கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்வு செய்பவரை முதல்வராக ஏற்பதாக மூன்று மாநில எம்எல்ஏக்களும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, அதனை தலைமைக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். எனவே, இப்போது அனைவரது கவனமும் தில்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்தை நோக்கி திரும்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com