மேக்கேதாட்டு, ரஃபேல் விவகாரங்களால் அமளி: நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மேக்கேதாட்டு அணை, ரஃபேல் ஒப்பந்தம், ராமர் கோயில் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்
மக்களவையில் புதன்கிழமை அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்ட அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.
மக்களவையில் புதன்கிழமை அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்ட அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.


மேக்கேதாட்டு அணை, ரஃபேல் ஒப்பந்தம், ராமர் கோயில் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் புதன்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் அமர்வு, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் புதன்கிழமை கூடியது. கேள்வி நேரம் தொடங்கியதும், ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்களும், மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும்; கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்களும், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என சிவசேனை கட்சி உறுப்பினர்களும், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். 
அப்போது, அதிமுக உறுப்பினர்கள் மேக்கேதாட்டு, காவிரி விவகாரம் தொடர்புடைய கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு குரல் எழுப்பினர். 
இருக்கையில் அமருமாறு சுமித்ரா மகாஜன் கேட்டுக் கொண்ட பின்னரும் எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், நண்பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அமளியின்போது பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மூத்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அதிமுக குழுத் தலைவர் பி.வேணுகோபால் உள்ளிட்டோர் அவையில் இருந்தனர்.
அணை பாதுகாப்பு மசோதா: அவை கூடிய போது மீண்டும் அக்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று அமளியைத் தொடர்ந்தனர். அமளிக்கிடையே, அணைப் பாதுகாப்பு மசோதாவை சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் சார்பில் மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார். இதற்கு, ஒடிஸா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் கட்சி உறுப்பினர் பர்த்ருஹரி மஹ்தாப் எதிர்ப்புத் தெரிவித்தார். 
அமளி தொடர்ந்ததால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில்....: மாநிலங்களவை அதன் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு தலைமையில் கூடியதும், அமெரிக்க முன்னாள் அதிபர் சீனியர் ஜார்ஜ் டபிள்யு புஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிமுக, திமுக உறுப்பினர்கள் மேக்கேதாட்டு அணை, கஜா புயல் நிவாரண நிதி உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி அவையின் மையப் பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர். அதிமுக குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன், திமுக குழுத் தலைவர் கனிமொழி மற்றும் அக்கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா தனது இருக்கையில் இருந்தவாறு இக்கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என எழுதப்பட்ட வாசகம் அடங்கிய பதாகையை அதிமுக உறுப்பினர்கள் கைகளில் ஏந்தியபடி குரல் எழுப்பினர்.
ரஃபேல் விவகாரத்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பினர். அப்போது, அவைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, பல்வேறு கட்சிகளிடமிருந்து அவசர முக்கிய விவகாரங்களை விவாதிப்பதற்காக நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால், உறுப்பினர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்து அவை அலுவல் நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எனினும், அமளி தொடர்ந்ததால், மாநிலங்களவை நண்பகல் 12 மணிவரையும், பின்னர் மதியம் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 
பாராட்டு: முன்னதாக, உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற எம்.சி.மேரி கோமுக்கு இரு அவைகளிலும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவையில் எம். வெங்கய்ய நாயுடு, ஆறு முறை உலக தங்கப் பதக்கங்களை பெற்றதன் மூலம் மேரி கோம் வரலாறு படைத்துள்ளார். விளையாட்டுத் துறையில் புகழின் உச்சத்தை தொட்டுள்ளார் என்று புகழாரம் சூட்டினார். விளையாட்டில் பதக்கம் வென்றதற்காக சோனியா சஹல், சிம்ரஞ்சித் கௌர், லவ்லினா போர்கோஹைன் ஆகியோருக்கும் அவையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. 

தமிழக கட்சியைப் பயன்படுத்தி முடக்கம்: திரிணமூல் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த கட்சியை பாஜக தலைமையிலான மத்திய அரசு களமிறக்கியுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.


இது குறித்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் குழு தலைவர் டெரிக் ஓ பிரையன் தனது சுட்டுரையில், அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்க திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. நாடாளுமன்றத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதற்கு தமிழகத்தில் உள்ள கட்சியை பாஜக களமிறக்கியுள்ளது என்று அவர் பதிவிட்டார். இருந்தபோதிலும், தமிழ்நாட்டுக் கட்சியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com