பாதுகாப்பு, அணுசக்தி துறைகளில் ஒத்துழைப்பு: இந்தியா-பிரான்ஸ் பேச்சுவார்த்தை

இந்தியா-பிரான்ஸ் இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு, அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தில்லியில் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லெட்ரியனை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
தில்லியில் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லெட்ரியனை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

இந்தியா-பிரான்ஸ் இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு, அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இருநாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லெட்ரியன், தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு, அணுசக்தி, பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சந்திப்புக்கு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது:
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பு மிகவும் பலனளிக்கும் வகையில் அமைந்தது. இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்குத் தேவையான வகையில் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உள்ளோம். இது, இரு நாடுகளுக்கு மட்டுமன்றி, பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பலனளிக்கும்.
பரஸ்பர நம்பிக்கை அடிப்படையிலேயே இரு நாடுகளுக்கிடையேயான உறவு நீடித்து வருகிறது. பாதுகாப்புத் துறையில் எங்களது உறவு சிறப்பாக உள்ளது. பலவித ராணுவ கூட்டுப் பயிற்சிகள் இணைந்து நடத்தப்பட்டு வருகின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து போராடி வருகின்றன. கடந்த ஆண்டு பிரான்ஸூடன் ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அது 2022-ஆம் ஆண்டுக்குள் இன்னும் அதிகரிக்கும் என்று கூறினார்.
சந்திப்பு குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுகையில், "மகாராஷ்டிரத்தில் உள்ள ஜெய்தாபூரில் அணு உலை அமைக்கும் திட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்தோம். 10 ஜிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு அணு உலை அமைக்கப்படவுள்ளது. நாட்டின் 40 சதவீத மின்சாரத் தேவையை நிலக்கரி, இயற்கை எரிவாயு உள்ளிட்ட படிம எரிபொருள்கள் அல்லாத மூலப்பொருள்களில் இருந்து  உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை அடைய இந்த திட்டம் உதவியாக இருக்கும். இந்தியா-பிரான்ஸ் இடையேயான 20 ஆண்டு கால உறவு தானாக நடைபெறவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கருத்தொற்றுமை மற்றும் லட்சியங்கள் காரணமாகவே இந்த உறவு நீடித்து வருகிறது. மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்து 10 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், இரு நாடுகளும் இணைந்து பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகின்றன. 
"இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் பிரான்ஸின் பல நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றன. நகர்ப்புற மேம்பாடு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பிரான்ஸ் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. எதிர்கால இந்தியா மற்றும் பிரான்ஸின் வளர்ச்சிக்காக இரு நாட்டு நிறுவனங்களும் இணைந்து பங்காற்றி வருகின்றன' என்றார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வந்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனினும் இந்த சந்திப்பின்போது, ரஃபேல் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று தகவல்கள் வெளியாகின. 
பிரதமர் வரவேற்பு: இந்தியா-பிரான்ஸ் இடையேயான உறவை வலுப்படுத்த, பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லெட்ரியன், பிரதமர் மோடியை சனிக்கிழமை சந்தித்தார். அதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "பிரான்ஸில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்த அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து மோடியிடம் பிரான்ஸ் அமைச்சர் விளக்கினார். அதை வரவேற்ற பிரதமர், கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்திருந்த பிரான்ஸ் அதிபருடனான சந்திப்பு குறித்து நினைவு கூர்ந்தார்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com