பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி குறைப்பு: வாடிக்கையாளர்களுக்கு பயனில்லை

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி குறைப்பு: வாடிக்கையாளர்களுக்கு பயனில்லை

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அதற்கு பதிலாக புதிதாக சாலை வரி அமலாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது எனத் தெரிகிறது. எதிர்வரும் நிதியாண்டுக்கான (2018-19) மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நிதி - நிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பெட்ரோல், டீசல் மீது வரிச் சலுகைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல, பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டருக்கு ரூ.6.48-இல் இருந்து ரூ.4.48-ஆகக் குறைப்பதாகவும், டீசலுக்கான வரியை ரூ.8.33-இல் இருந்து ரூ.6.33-ஆகக் குறைப்பதாகவும் ஜேட்லி அறிவித்தார்.
ஆனால், அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ரூ.8 வீதம் புதிதாக சாலை வரி விதிப்பதாக அதற்கு அடுத்து ஜேட்லி தெரிவித்தார். இதன் காரணமாக எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது எனக் கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களாகவே முன்னெப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது உயர்ந்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.75 வரை சென்றுள்ளது. டீசலும் வரலாறு காணாத வகையில் லிட்டர் ரூ.65-ஆக உயர்ந்துள்ளது.
பல்வேறு வரி விதிப்புகளின் காரணமாகவே அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. எனவே, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அல்லது வரிகளைக் குறைத்து வாகன ஓட்டிகளுக்கு சிறிய ஆறுதலை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள், 'மத்திய பட்ஜெட்டில் எரிபொருள் விலை குறைப்பு தொடர்பாக ஏதாவது ஓர் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்த நிலையில், ஏமாற்றமே இறுதியில் மிஞ்சியது' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com