இரட்டைப் பதவி மூலம் எந்த ஆதாயமும் பெறவில்லை: தகுதி நீக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வாதம்

பார்லிமென்ட்டரி செயலர் பதவி மூலம் எந்த ஆதாயமும் பெறவில்லை என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் தகுதி நீக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இரட்டைப் பதவி மூலம் எந்த ஆதாயமும் பெறவில்லை: தகுதி நீக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வாதம்

பார்லிமென்ட்டரி செயலர் பதவி மூலம் எந்த ஆதாயமும் பெறவில்லை என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் தகுதி நீக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆதாயம் தரும் இரட்டை பதவி விகித்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தொடுத்த வழக்கு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சந்தர் சேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.

அப்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் மோகன் பராசுரன் முன்வைத்த வாதம்:
பார்லிமென்ட்டரி செயலர்களாக நியமிக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் யாரும் ஆதாயம் ஏதும் பெறவில்லை. இதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளாமல் அவர்களை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்துவிட்டது' என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது:
ஆதாயம் தரும் பதவியை ஒருவர் வகித்தாரா என்பது, அவரது பதவி நியமனத்திற்கு எந்த அளவுக்கு அதிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற அடிப்படையில்தான் முடிவு செய்ய முடியும். அதன்பின்னர் தான் பிற காரணிகளை கருத்தில் கொள்ள முடியும். பதவி நியமனத்திற்கான அதிகாரம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்தப்பதவி ஆதாயம் தரும் பதவியாக இருக்கலாம். அதேநேரத்தில் அந்தப் பதவியின் மூலம் ஆதாயமோ, லாபமோ அடையலாமா என்பது குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தப் பதவி வகிப்பதன் மூலம் ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், அவர் ஆதாயம் பெறவில்லை என்றாலும், அது ஆதாயம் தரும் பதவியாகவே கருதப்படும். ஆகவே, ஆதாயம் பெறும் பதவியா என்பதை முதலில் முடிவு செய்ய, பதவி நியமனத்திற்காக பயன்படுத்தப்பட்ட அதிகாரம் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னணி: ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்ததற்காக 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஜனவரி 19-ம் தேதி பரிந்துரை செய்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஜனவரி 20-ம் தேதி ஒப்புதல் அளித்ததையடுத்து, 20 எம்எல்ஏக்களை தில்லி சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஏற்கெனவே தில்லி உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தகுதி நீக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைக்கு தடை விதிக்க மறுத்த தில்லி உயர் நீதிமன்றம், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல என்று தேர்தல் ஆணையம் தில்லி உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் இந்த வழக்கு தினந்தோறும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தது.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பார்லிமென்ட்டரி செயலர்களாக நியமனம் செய்ததற்கு துணைநிலை ஆளுநரிடம் ஒப்புதல் பெறவில்லை என்பதால், தில்லி அரசின் உத்தரவு செல்லாது என்று தில்லி உயர் நீதிமன்றம் கடந்த 2016, செப்டம்பர் 8-ம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பார்லிமென்ட்டரி செயலர் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com