ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: பட்ஜெட் பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சனம்

மத்திய பட்ஜெட்டானது சாமானிய மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய துரோகம் என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டின.

மத்திய பட்ஜெட்டானது சாமானிய மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய துரோகம் என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டின. மக்களிடம் பொய்ப் பிரசாரங்களை மத்திய அரசு முன்வைத்து வருவதாகவும் அக்கட்சிகள் விமர்சித்துள்ளன.
மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின்போது திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ.பிரையன் பேசுகையில், "ரயில்வே உள்கட்டமைப்பு உள்பட பல்வேறு பட்ஜெட் திட்டங்களில் நிதிச் சுமையானது மாநிலங்களின் மேல் சுமத்தப்பட்டுள்ளன' என்றார். அதைத் தொடர்ந்து சமாஜவாதி கட்சி உறுப்பினர் நீரஜ் சேகர் பேசியதாவது:
பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்தியுள்ளதாகவும், அதன் வாயிலாக வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியா நடைபோடுவதாகவும் பாஜக அரசு பிரகடனம் செய்கிறது. கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு இலவச வங்கிக் கணக்குத் தொடங்கித் தந்துள்ளதாகவும், அதில் ரூ.71,000 கோடி டெபாசிட் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு அந்தக் கணக்குகளில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டன? என்பதை மத்திய அரசால் கூற முடியுமா? பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 68 டாலர்களாக இருக்கிறது. ஆனால், அது 140 டாலராக இருந்தபோது இந்தியாவில் பெட்ரோலுக்கு என்ன விலை நிர்ணயிக்கப்பட்டதோ அதுவேதான் இப்போதும் நீடிக்கிறது. இது என்ன வகையான கணக்கு என்பதை நாட்டு மக்களிடம் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
சாமானியர்களிடமும், குறிப்பாக விவசாயிகளிடமும் தவறான பிரசாரங்களை முன்வைப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டானது ஏழை மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள பெரும் துரோகம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com