உயிரிழந்த மகனின் விந்தணுவைக் கொண்டு பேரக் குழந்தைகள் பெற்ற இந்திய தம்பதி

மூளைப் புற்றுநோயால் 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தங்களது திருமணமாகாத 27 வயது மகனின் விந்தணுவைப் பயன்படுத்தி இந்திய தம்பதியர் பேரக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.
உயிரிழந்த மகனின் விந்தணுவைக் கொண்டு பேரக் குழந்தைகள் பெற்ற இந்திய தம்பதி


புனே: மூளைப் புற்றுநோயால் 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தங்களது திருமணமாகாத 27 வயது மகனின் விந்தணுவைப் பயன்படுத்தி இந்திய தம்பதியர் பேரக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.

மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தங்களது 27 வயது மகனின் விந்தணுவுக்குப் பொருந்தும் கரு மூட்டையைக் கொண்டு, உறவினர் பெண்ணின் கருப்பையில் வளர்த்து இரட்டைப் பேரக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

2013ம் ஆண்டு, ஜெர்மனியில் உயர் கல்வி படித்து வந்த இளைஞருக்கு மூளைப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புற்றுநோய் சிகிச்சைக்காக கீமோ தெரபி கொடுப்பதால், அவரது விந்தணு பாதிக்கும் என்ற முன்னெச்சரிக்கையால், ஜெர்மன் மருத்துவமனையில் அவரது விந்தணு எடுத்து பாதுகாத்து வைக்கப்பட்டது. தொடர் சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த இளைஞர் உயிரிழந்தார். தற்போது அந்த உயிரணுக்களைக் கொண்டு அவரது பெற்றோர் பேரக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்து 49 வயதான தாய் கூறுகையில், மிக அன்பான மகனாக இருந்தான். புத்திசாலி மாணவனாக திகழ்ந்தான். மூளைபுற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டு, அவனது பார்வை பறிபோன பிறகும் கூட நம்பிக்கை இழக்காமல் உற்சாகத்தோடு சிகிச்சை பெற்று வந்தான். தனது கடைசி மூச்சு இருக்கும் வரை எங்களை நகைச்சுவைகளைக் கூறி சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தான். அதனால்தான் அவனை இழந்தும், அவன் மூலமாக எங்களுக்கு பேரக் குழந்தைகள் வேண்டும் என்று கருதி அவனது விந்தணுக்களை பயன்படுத்தி பேரக் குழந்தைகளை பெற்றெடுத்தோம் என்கிறார்.

ஜெர்மனியில் இருந்து விந்தணுவைக் கொண்டு வந்து புனேயில் உள்ள மருத்துவமனையில் ஐவிஎஃப் முறையில் குழந்தைப் பேறு உண்டாக்கப்பட்டது. பேரக் குழந்தைகளை அவரே பெற்றெடுக்க விரும்பியும், அவரது உடல்நிலை அதற்கு பொருந்தாததால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் அந்தக் குழந்தைகளை 10 மாதம் சுமந்து பெற்றெடுத்துள்ளார்.

இந்தியாவில் இது முதல் முறை அல்ல என்றும், இதற்கு முன்பே 3 அல்லது 4 நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. ஒருவரது மரணத்துக்குப் பிறகு அவருக்குக் குழந்தைகள் பிறப்பதை சட்டம் எப்படி பார்க்கிறது என்பது தெரியவில்லை என்றும் விமரிசனங்கள் எழுகின்றன. இது குறித்து பல கேள்விகளையும் நிபுணர்கள் எழுப்பி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com