பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதற்கு பிரதமரின் தெளிவில்லாத கொள்கைகளே காரணம்: காங்கிரஸ் தாக்கு

பயங்கரவாதத் தாக்குதல்களும், எல்லையில் பாகிஸ்தான் படையினரின் அத்துமீறல்களும் அதிகரித்திருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தெளிவில்லாத கொள்கைகளே காரணம்
பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதற்கு பிரதமரின் தெளிவில்லாத கொள்கைகளே காரணம்: காங்கிரஸ் தாக்கு

பயங்கரவாதத் தாக்குதல்களும், எல்லையில் பாகிஸ்தான் படையினரின் அத்துமீறல்களும் அதிகரித்திருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தெளிவில்லாத கொள்கைகளே காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது:
நமது நாட்டின் பாதுகாப்பு நாள்தோறும் சமரசம் செய்து கொள்ளப்படுவதும், அதை மத்திய அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் துரதிருஷ்டவசமானது ஆகும். கடந்த 44 மாத பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஆட்சியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் 286 வீரர்களும், 138 பொது மக்களும் பலியாகியுள்ளனர். இதே எண்ணிக்கை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் 115 மற்றும் 72ஆகதான் இருந்தன.
கடந்த 44 மாத பாஜக கூட்டணி அரசின் ஆட்சியில் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல்களும் 4 மடங்கு அதிகமாகி விட்டது. அதாவது, பாஜக கூட்டணி அரசின் ஆட்சியில் 2,555 அத்துமீறல்கள் நடந்துள்ளன. ஆனால், காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் வெறும் 543 அத்துமீறல்கள்தான் நடந்தன.
பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கும் நேரத்தில் எல்லாம், நமது அண்டை நாட்டை (பாகிஸ்தான்) நோக்கி கைவிரலை காட்டிவிட்டு, தனது பொறுப்பை பாஜக கூட்டணி அரசு தட்டிக்கழித்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரிடம் காங்கிரஸ் 5 கேள்விகளைக் கேட்கிறது. தேசியவாதம் குறித்து பாடம் எடுத்து, அதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டாம். உண்மைகள், புள்ளி விவரங்களுடன் நீங்கள் (பிரதமரும், பாஜகவும்) அந்த கேள்விகளுக்கு பதில்களை அளிக்க வேண்டும்.
மோடி அரசின் தெளிவில்லாத தேச பாதுகாப்புக் கொள்கையால், எல்லையில் பதற்றம் உருவாகியுள்ளது. உலகத் தரத்திலான நமது நாட்டு ராணுவத்தையும், வீரமிக்க நமது ராணுவ வீரர்களையும் காங்கிரஸ் கட்சி எப்போது ஆதரிக்கிறது. ஆனால், நமது வீரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த தெளிவில்லாத, தயக்கம் நிறைந்த, சீரற்ற, தன்னிச்சையான பாதுகாப்புக் கொள்கையை நிராகரிக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகும்?
எல்லையில் 5 மடங்கு அதிகமாக 2,555 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ள பாகிஸ்தான் தற்போது நம்மை நேருக்கு நேராக பார்த்து பரிகாசம் செய்கிறது. இதுதான் உங்களது வீரமா? இதுதான் உங்களது தேசியவாதமா? அல்லது வெறும் வார்த்தை ஜாலம்தானா?
மோடி அரசின் ஆட்சியின்கீழ் கடுமையான பாதுகாப்பு இருக்கும்போது, நாட்டுக்குள்ளும், ராணுவ தளத்துக்குள்ளும் எப்படி பயங்கரவாதிகளால் ஊடுருவி தாக்குதல் நடத்த முடிகிறது? பிரதமர் மோடி அரசின் ஆட்சியின்கீழ் எப்படி அவர்களுக்கு ஆயுதங்களும், நிதியுதவியும் கிடைக்கின்றன? பயங்கரவாதிகளின் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் அரசு புலனாய்வு அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? தப்பியோடும் பயங்கரவாதிகளை ஏன் நாடு கடத்தி கொண்டு வரவில்லை?
நாடு கடத்தி யாரையும் கொண்டு வரும்வகையில் உங்களது வெளிநாட்டு கொள்கையில் என்ன சக்தி இருக்கிறது?
இந்த கேள்விகள் அனைத்தும் நீங்கள் எழுப்பியவைதான். அவற்றைத்தான் நாங்கள் உங்களிடம் கேட்டுள்ளோம். இந்த 5 கேள்விகள் தொடர்பாக நீங்கள் செயல்படுங்கள். அப்படி செயல்பட்டாலே, பயங்கரவாதம் அழிந்து விடும். ஆனால், முன்பு எங்களை நோக்கி நீங்கள் எழுப்பிய இந்த கேள்விகளுக்கு உங்களிடமே பதில்கள் இருக்காது என்றார்அபிஷேக் சிங்வி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com