ரூ.11,400 கோடி மோசடி: தொழிலதிபர் மீது பிஎன்பி புகார்

பிரபல வைர விற்பனை தொழிலதிபர் நீரவ் மோடி, சட்ட விரோத பரிவர்த்தனைகள் மூலம் ரூ.11,400 கோடி மோசடி செய்துள்ளதாக மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் (சிபிஐ) பஞ்சாப் நேஷனல் வங்கி

பிரபல வைர விற்பனை தொழிலதிபர் நீரவ் மோடி, சட்ட விரோத பரிவர்த்தனைகள் மூலம் ரூ.11,400 கோடி மோசடி செய்துள்ளதாக மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் (சிபிஐ) பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) புகார் அளித்துள்ளது. ஒரு தங்க நகை நிறுவனத்துக்கு எதிராகவும் அந்த வங்கி புகார் கொடுத்துள்ளது.
பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி, தனது பெயரிலேயே சர்வதேச அளவில் வைரங்களை விற்பனை செய்து வருகிறார். அவருக்கு எதிராக சிபிஐயிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி புதன்கிழமை கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:
நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பையில் உள்ள கிளை ஒன்றில் இருந்து வெளிநாடுகளில் உள்ள சிலருக்கு சட்ட விரோதமாகப் பணம் அனுப்பியுள்ளார். இதன் மூலம், ரூ.11,400 கோடிவரை மோசடி செய்துள்ளார். அந்தப் பரிவர்த்தனைகளுக்கு மற்ற வங்கிகளும் கடனாகப் பணம் கொடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது. வங்கி அலுவலர்களின் உடந்தையோடு இந்த மோசடி நடைபெற்றுள்ளது என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறியதாவது:
நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்ட விரோத பரிவர்த்தனை மூலம் ரூ.280 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் புகாரை சிபிஐ ஏற்கெனவே விசாரித்து வருகிறது. அவருக்கு எதிராகவும், கீதாஞ்சலி என்ற பெயரில் நகைக் கடைகளை நடத்தி வரும் மெஹுல் சோஸ்கி என்பவருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவருக்கு எதிராக அந்த வங்கி சார்பில் கொடுத்துள்ள புதிய புகார்களை ஆய்வு செய்து வருகிறோம்.
நீரவ் மோடிக்கும், தங்க நகை நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பதாக அந்தப் புகாரில் குறிப்பிடவில்லை. எனினும், அந்த வங்கி அளித்துள்ள பணப் பரிவர்த்தனை பட்டியலில் நீரவ் மோடிக்கும், தங்க நகை நிறுவனத்துக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றின் அடிப்படையில் நீரவ் மோடி மற்றும் அந்த தங்க நகை நிறுவனத்துக்கு எதிராகவும் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
வங்கிகளுக்கு உத்தரவு: இதனிடையே, இந்தப் புகாரில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளுக்கு தொடர்பிருப்பதால், சம்பந்தப்பட்ட வங்கிகள் தங்களது பணப் பரிவர்த்தனை அறிக்கைகளை இந்த வார இறுதிக்குள் நிதிச்சேவைத் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com