இந்தியாவுக்கு வீட்டோ அதிகாரம்: ஈரான் ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடத்தை வழங்கி, வீட்டோ அதிகாரத்தை அளிப்பதற்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே சாபஹார் துறைமுகப் பணிகளின்
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு கைகுலுக்கிக் கொண்ட ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி, பிரதமர் நரேந்திர மோடி.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு கைகுலுக்கிக் கொண்ட ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி, பிரதமர் நரேந்திர மோடி.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடத்தை வழங்கி, வீட்டோ அதிகாரத்தை அளிப்பதற்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே சாபஹார் துறைமுகப் பணிகளின் இயக்கம் உள்பட 9 துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்தியா வந்துள்ள ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானிக்கு தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை ஹசன் ரௌஹானி சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர். தவிர, ஆப்கன் உள்ளிட்ட பிராந்திய விவகாரங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்ததாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார். 
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து மோடியும், ரௌஹானியும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 
அப்போது ரௌஹானி கூறியதாவது:
நாங்கள் வரி தொடர்பான விவகாரங்கள் குறித்தும் வங்கி உறவுகள் குறித்தும் ஆக்கபூர்வமான முறையில் பேச்சு நடத்தினோம். இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோகெமிக்கல் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். இரு நாடுகளும் முக்கியமான இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்த அதேவேளையில், ஒரு விஷயத்தில் கூட நாங்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கவில்லை.
100 கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட, அமைதியை விரும்பும் நாடான இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் ஏன் அளிக்கப்படவில்லை? அமெரிக்கா அந்த அதிகாரத்தை அனுபவிப்பது எப்படி?அணுகுண்டுகளை வைத்துள்ள ஐந்து சக்தி வாய்ந்த நாடுகளுக்கு மட்டுமே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது ஏன்? ஈரானியர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க அமெரிக்கா முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள் தொழில், வர்த்தகத்துக்கும் அப்பாற்பட்டு, வரலாற்றுடன் தொடர்புடையதாக உள்ளன. இரு நாடுகளும் ஒரேவிதமான வரலாறு மற்றும் கலாசாரத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இந்தியாவும் ஈரானும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
அமெரிக்கா வருந்தும்: உலக நாடுகளுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் இறுதி வரை நிறைவேற்றும். அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினால், பின்னர் அந்த நாடு வருத்தப்பட நேரிடும்.
ஆப்கானிஸ்தானின் அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் அனைத்து தரப்பினரும் பாடுபட வேண்டும் என்பதே இந்தியா, ஈரான் ஆகிய இருநாடுகளின் கருத்தாகும். சிரியா, இராக், யேமன் போன்ற பிராந்தியப் பூசல்கள் அனைத்தும் ராஜீய மற்றும் அரசியல் முன்முயற்சிகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றார் ரௌஹானி.
முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா, ஈரான் ஆகிய இரு நாடுகளுமே பயங்கரவாதம் இல்லாத உலகையே விரும்புகின்றன. பயங்கரவாதம், போதை மருந்துக் கடத்தல், இணையவெளிக் குற்றங்கள் மற்றும் இதர சர்வதேசக் குற்றங்களை ஊக்குவிக்கும் சக்திகளின் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த உறுதிபூண்டுள்ளன. 
சாபஹார் துறைமுகத்தை மேம்படுத்துவது, ஆப்கானிஸ்தானையும் மத்திய ஆசியாவையும் சென்றடைய உதவும். சாபஹார் துறைமுகத்தை மேம்படுத்துவதில் ஈரான் அதிபர் காட்டிய அக்கறை பாராட்டத்தக்கது என்றார் மோடி.
இரு தலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையே சாபஹார் துறைமுகப் பணிகளின் இயக்கம் உள்பட 9 துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி, சாபஹார் துறைமுகத்தின் முதல்கட்டமான ஷாகித் பெஹேஷ்டி துறைமுகத்தில் தற்போதுள்ள வசதிகளை அடுத்த 18 மாதங்களுக்கு இயக்குவது-கையாள்வது தொடர்பான ஒப்பந்தம், ஈரானின் துறைமுகம் மற்றும் கடல்சார் அமைப்புக்கும், இந்தியாவின் போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது.
தவிர, இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு, குற்றவாளிகளை நாடுகடத்தும் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது, ராஜீய-தூதரக கடவுச்சீட்டுகள் வைத்திருப்போருக்கு விசா அவசியம் என்பதில் இருந்து விதிவிலக்கு அளிப்பது, பாரம்பரிய மருத்துவ முறைகள், வர்த்தக நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக நிபுணர் குழு அமைப்பது உள்ளிட்ட ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.
இந்த 9 ஒப்பந்தரங்கள் தவிர, மேலும் நான்கு உடன்படிக்கைகளும் இருதரப்புக்கும் இடையே கையெழுத்தானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு

இந்தியா மற்ற நாடுகளுடன் செய்து கொண்டுள்ளதைப் போல் ஈரானுடனும் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா- ஈரான் இடையே இடையே முதலீடுகள், தொழில்நுட்பம் ஆகியவை வருவதையும், பணியாளர்கள் வருவதையும் இந்த ஒப்பந்தம் முறைப்படுத்தும். சர்வதேச தரத்தின்படி இரு நாடுகளிடையே தகவல் பரிமாற்றத்துக்கும் இது வழிவகுக்கும். இது வரி விவகாரங்களில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு வரி ஏய்ப்பைத் தடுக்கவும் உதவும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியத் தொழிலதிபர்களுக்கு அழைப்பு

தில்லியில் இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பில் (ஃபிக்கி) ஈரான் பொருளாதார விவகாரம் மற்றும் நிதித்துறை அமைச்சர் மசூத் கர்பாசியான் உரையாற்றினார். அவர் பேசுகையில், ஈரானில் முதலீடு செய்யுமாறும், தங்கள் நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சியில் இருந்து பலனடையுமாறு இந்தியத் தொழிலதிபர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். "இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு போன்ற அடிப்படை பொருளாதார மற்றும் வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டது, கூட்டுத் தயாரிப்புத் திட்டங்களை ஆதரிப்பது ஆகியவை பல்வேறு நிறுவனங்களும் ஈரானுக்குள் அதிக தடைகள் ஏதுமின்றி நுழைவதற்கு உதவும். ஈரானில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம்' என்று மசூத் கர்பாசியான் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com