உ.பி. இடைத் தேர்தலில் பாஜகவுக்கு பாடம் கற்பிக்கப்படும்: அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் இரு மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்
உ.பி. இடைத் தேர்தலில் பாஜகவுக்கு பாடம் கற்பிக்கப்படும்: அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் இரு மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில பாஜக அரசுகள் உத்தரப் பிரதேசத்தின் நலனுக்காக அளித்த எந்த வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற பிறகு தனது எம்.பி. பதவியை அவர் ராஜிநாமா செய்தார். இதனால் கோரக்பூர் மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 
அதேபோன்று துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெüரியாவும் எம்.பி. பதவியைத் துறந்ததால் பூல்பூர் தொகுதியும் காலியானது. இதையடுத்து, அவ்விரு தொகுதிகளுக்கும் அண்மையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் சார்பில் அத்தொகுதிகளுக்கு டாக்டர் சரிதா, மணீஷ் மிஸ்ரா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் சமாஜவாதி, பாஜக ஆகிய கட்சிகளின் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் மாநிலத் தலைநகர் லக்னெüவில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்த அகிலேஷ் யாதவ், இதுதொடர்பாகக் கூறியதாவது:
இடைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை சமாஜவாதி கட்சி விரைவில் வெளியிடும். மத்தியில் பாஜக அரசு 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டது. அதேபோன்று மாநில சட்டப் பேரவையில் 2 முறை பட்ஜெட் தாக்கலாகிவிட்டது. இருப்பினும், உத்தரப் பிரதேச மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதிகளையும் மத்திய, மாநில பாஜக அரசுகள் முறையாக நிறைவேற்றவில்லை.
மாநில விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அதைத் தடுக்க வேண்டிய யோகி ஆதித்யநாத் அரசோ, அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இடைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றார் அகிலேஷ் யாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com