திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல்: 76 % வாக்குகள் பதிவு

திரிபுரா சட்டப் பேரவைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த பேரவைத் தேர்தலில் பதிவான 91.82 சதவீதத்தை விட 15 சதவீதம் குறைவாகும். 
திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி தலைநகர் அகர்தலாவில் உள்ள ராஜ்நகர் பகுதியில் வாக்களிக்க அடையாள அட்டைகளுடன் காத்திருந்த வாக்காளர்கள். (வலது) வாக்களிக்க வந்த மாநில முதல்வர் மாணிக் சர்க்கார்.
திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி தலைநகர் அகர்தலாவில் உள்ள ராஜ்நகர் பகுதியில் வாக்களிக்க அடையாள அட்டைகளுடன் காத்திருந்த வாக்காளர்கள். (வலது) வாக்களிக்க வந்த மாநில முதல்வர் மாணிக் சர்க்கார்.

திரிபுரா சட்டப் பேரவைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த பேரவைத் தேர்தலில் பதிவான 91.82 சதவீதத்தை விட 15 சதவீதம் குறைவாகும். 
இம்முறை பதிவான வாக்குகள், மார்ச் மாதம் 3-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. மாநிலத்தில் 25 ஆண்டுகளாக ஆண்டு வரும் இடதுசாரிக் கூட்டணி தனது ஆட்சியைத் தக்கவைக்கவும், இக்கூட்டணியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்புடன் பாஜக கூட்டணியும் களமிறங்கி உள்ளதால் இத்தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் உள்ள சட்டப் பேரவையின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. பேரவையில் மொத்தமுள்ள 60 இடங்களில் 59 இடங்களுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. சாரிலாம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமேந்திர நாராயண் தேவ் வர்மா கடந்த 5 நாள்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதையடுத்து, அந்தத் தொகுதிக்கான தேர்தல் மார்ச் மாதம் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. 
இந்நிலையில், திரிபுராவில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலுக்காக 3,214 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 47 வாக்குச்சாவடிகள் பெண்களுக்கான பிரத்யேக வாக்குச்சாவடிகள் ஆகும். 
தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதை உறுதிசெய்வதற்காக திரிபுரா முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக மாநில காவல்துறை டிஜிபி அகில்குமார் சர்மா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் "மாநில ஆயுதப்படை போலீஸாருடன் சேர்த்து மத்திய ஆயுதப்படைகளின் 300 கம்பெனிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதேவேளையில் திரிபுராவில் உள்ள 856 கி.மீ. நீளம் கொண்ட இந்திய-வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.
திரிபுரா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் தரனிகாந்தி கூறுகையில், வாக்காளர்களுக்கு சிரமங்கள் ஏதுமில்லாத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவதற்காக காவல்துறை பார்வையாளர்கள், பொதுப் பார்வையாளர்கள், செலவுப் பார்வையாளர்கள் ஆகியோரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது என்று தெரிவித்தார். மேலும், மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரை ஒருங்கிணைக்க சிறப்புப் பார்வையாளராக இந்திய-திபெத் எல்லைக் காவல்படையின் இயக்குநர் ஆர்.கே.பச்நந்தாவும் நியமிக்கப்பட்டார்.
மாநிலத்தில் சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டன. எனினும், அவை உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்தது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பின் தேர்தல் ஆணையம் தெரிவிக்கையில் மாநிலத்தில் மொத்தம் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறியது. எனினும், 4 மணிக்குப் பிறகும் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக தொடர்ந்து காத்திருந்தனர். தேர்தல் சட்டங்களின்படி வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் காத்திருக்கும் வாக்காளர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு திரிபுராவில் 4 மணிக்குப் பிறகும் நடைபெற்ற வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் பின்னர் வெளியிட்டது. அதன்படி அந்த மாநிலத்தில் 76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக துணைத் தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில் "திரிபுராவில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 91.82 சதவீத வாக்குகளும், 2014 மக்களவைத் தேர்தலில் 84.32 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இம்முறை வாக்குப்பதிவு நாளில் இரண்டு நாட்டு குண்டுகள் கண்டறியப்பட்டன. அவற்றை பாதுகாப்புப் படையினர் செயலிழக்கச் செய்தனர்' என்றார்.
மாநிலத்தில் மொத்தமுள்ள 60 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 307 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 60 தொகுதிகளில் இடதுசாரிக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆர்எஸ்பி, பார்வர்டு பிளாக், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய பிற இடதுசாரி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன. திரிபுராவைச் சேர்ந்த ஐபிஎஃப்டி எனும் திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. பாஜக மட்டும் 51 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. எஞ்சிய 9 தொகுதிகளில் ஐபிஎஃப்டி கட்சி போட்டியிடுகிறது. 
காங்கிரஸ் கட்சி, இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. 60 தொகுதிகளில் 59 தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கோமதி மாவட்டத்தில் உள்ள காக்ரபோன் தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் யாரும் நிறுத்தப்படவில்லை.
மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 27 தொகுதிகள் தனித் தொகுதிகள். எஞ்சியவை பொதுத் தொகுதிகள் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com