பிஎன்பி வங்கி மோசடி: அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் 200 நிழல் நிறுவனங்கள், பினாமி சொத்துகள்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி ரூ.11,400 கோடி மோசடி செய்த விவகாரத்தில், 200 நிழல் நிறுவனங்கள், பினாமி சொத்துகள் ஆகியவை அமலாக்கத் துறை, வருமான வரித் துறை
பிஎன்பி வங்கி மோசடி: அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் 200 நிழல் நிறுவனங்கள், பினாமி சொத்துகள்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி ரூ.11,400 கோடி மோசடி செய்த விவகாரத்தில், 200 நிழல் நிறுவனங்கள், பினாமி சொத்துகள் ஆகியவை அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவற்றின் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய நீரவ் மோடி (படம்), அவரது உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான மெஹுல் சோக்ஸி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாடு முழுவதும் நகைப்பட்டறைகள், நகைக் கடைகள் என 45-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. 
இதுதொடர்பாக, அமலாக்கத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 29 சொத்துகளை கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித் துறை முடக்கியுள்ளது. அந்த சொத்துகளை அமலாக்கத் துறை ஆய்வு செய்து வருகிறது. மேலும் சில சொத்துகள் விரைவில் முடக்கப்பட உள்ளன.
வங்கி மோசடியின் ஒரு பகுதியாக, பணம் பெறுவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த 200 நிழல் நிறுவனங்களை அமலாக்கத் துறையும், வருமான வரித் துறையும் கண்டறிந்துள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் பண மோசடி செய்வதற்கும், பினாமி சொத்துகளை உருவாக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. 
இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக, அமலாக்கத் துறையும், வருமான வரித் துறையும் சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளன.
இந்த விவகாரத்தில், இதுவரை ரூ.5,674 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் உள்ளிட்ட விலைமதிப்புள்ள பொருள்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது என்றார் அவர்.
இதேபோல், வரி ஏய்ப்பு செய்ததாக, கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் 9 வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை சனிக்கிழமை முடக்கியுள்ளது. 
இதுதவிர, நீரவ் மோடி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான 29 சொத்துகளையும், 105 வங்கிக் கணக்குகளையும் வருôன வரித் துறை முடக்கியுள்ளது.
இதர வங்கி அதிகாரிகளிடம் விசாரணை: இதனிடையே, நீரவ் மோடி அளித்த உத்தரவாதக் கடிதத்தை ஏற்று, அவருக்கு வைரக் கற்களை விற்பனை செய்த நிறுவனங்களுக்கு பணம் கொடுத்த வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளில் பணியாற்றும் அதிகாரிகளும் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர். அலாகாபாத் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, யூகோ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவற்றின் ஹாங்காங் நகர் கிளைகளில் பணியாற்றும் அதிகாரிகளிடம் வருமான வரி மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
சிபிஐ ஆய்வு: இதனிடையே, கீதாஞ்சலி ஜெம்ஸ் குழும நிறுவனத்தின் 18 துணை நிறுவனங்களின் வரவு-செலவுக் கணக்குகளை சிபிஐ ஆய்வு செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com