வங்கிகளில் மேலும் ஒரு தொழிலதிபர் ரூ.800 கோடி மோசடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.11,400 கோடியை மோசடி செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறிவிட்டது போல், மேலும் ஒரு தொழிலதிபர் ரூ.800 கோடியை மோசடி செய்து தப்பியோடி விட்டதாக
வங்கிகளில் மேலும் ஒரு தொழிலதிபர் ரூ.800 கோடி மோசடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.11,400 கோடியை மோசடி செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறிவிட்டது போல், மேலும் ஒரு தொழிலதிபர் ரூ.800 கோடியை மோசடி செய்து தப்பியோடி விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி (படம்) செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோஸ்கியும் ரூ.11,400 கோடி மோசடி செய்துள்ளனர். இதுபோல் பல மோசடிகள் நடந்துள்ளன. இந்திய வங்கிகளில் மேலும் ஒரு மோசடி நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ரோட்டாமாக் பேனா நிறுவனத்தின் உரிமையாளரான விக்ரம் கோத்தாரி, இந்திய வங்கிகளில் ரூ.800 கோடி கடன் வாங்கியுள்ளார். தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை.
இந்திய வங்கிகளில் நடந்துள்ள மோசடிகள் குறித்த செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்தவண்ணம் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் புள்ளி விவரங்கள், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்திய வங்கிகளில் ரூ.61,260 கோடி மோசடி நடந்திருப்பதாக தெரிவிக்கின்றன. இந்த 5 ஆண்டுகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மட்டும் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது.
இந்த மோசடி நபர்களுக்கும், பாஜகவில் மிகவும் உயரிய இடத்தில் இருக்கும் தலைவர்களுக்கும் இடையேயான தொடர்புகள், இந்தியப் பொருளாதாரம் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.
ஆதலால்தான், இந்திய வங்கி அமைப்பு முறை குறித்து வெள்ளை அறிக்கையை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது. இதேபோல், அனைத்து வங்கிகளுக்கும் மோசடி நபர்களின் பெயர்களையும், வராக்கடன்கள் தொடர்பான விவரங்களையும் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றார் மணீஷ் திவாரி.
மாயாவதி தாக்கு: இதனிடையே, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில், நீரவ் மோடி விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர், "ரூ.20,000 கோடி மோசடி நடந்துள்ளது; இந்த நேரத்தில் மத்திய அரசு என்ன தூங்கிக் கொண்டா இருந்தது? மக்கள் நலன் மீது அக்கறை வைத்துள்ள அரசா இது?' என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com