அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண்பதை ஏற்க முடியாது

பாபர் மசூதி - ராம ஜென்மபூமி வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வுகாண்பதை ஏற்க முடியாது என்று இந்த வழக்கின் மனுதாரர்களில் மூவர் தெரிவித்துள்ளனர்.

பாபர் மசூதி - ராம ஜென்மபூமி வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வுகாண்பதை ஏற்க முடியாது என்று இந்த வழக்கின் மனுதாரர்களில் மூவர் தெரிவித்துள்ளனர்.
அயோத்தியில் உள்ளூர் முஸ்லிம்களுடன் வழக்கின் மனுதாரர்களில் மூவரான் ஹாஜி மஹ்பூப், இக்பால் அன்சாரி, முகமது உமர் ஆகியோர் கடந்த சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர். 
அதில், "ஏற்கெனவே பாபர் மசூதி இருந்த இடத்தில் இல்லாமல், வேறு இடத்தில் புதிய மசூதி கட்டவோ, அந்த நிலத்தை வேறு யாருக்கும் அளிக்கவோ முஸ்லிம்கள் விரும்பவில்லை.
அதே நேரத்தில் ஹிந்துகள் விரும்பினால் பாபர் மசூதி இருந்த இடத்துக்கு வெளியே ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே எந்தத் தீர்வையும் காண முஸ்லிம்கள் விரும்பவில்லை. 
அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று முஸ்லிம்கள் நடப்பார்கள் என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. 
மனுதாரர்கள் மூவரின் முழு சம்மதத்துடனும், அவர்கள் கையெழுத்துடனும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
இதில் சன்னி முஸ்லிம்களின் பரேல்வி, தேவ்பந்தி பிரிவினரின் பிரதிநிதிகளும், ஷியா முஸ்லிமின் ஒரு பிரிவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
முன்னதாக, வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், முஸ்லிம் மத அறிஞர் மெளலானா சல்மான் நத்வி ஆகியோர் அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வுகாணுமாறு ஆலோசனை கூறினர். இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மனுதாரர்களின் ஒருவரான ஹாஜி மெஹ்பூப் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "எந்தக் கோயிலையும் இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்படவில்லை. 
1949 டிசம்பர் 22-ஆம் தேதிக்கு முன்பு பாபர் மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவது வழக்கமாக இருந்தது. 
1949-ஆம் ஆண்டுக்கு முன்பு ஹிந்து சகோதரர்கள் பாபர் மசூதி இருந்த இடத்துக்கு உரிமை கொண்டாடியது இல்லை.
மேலும், 1885-ஆம் ஆண்டு முதல் பாபர் மசூதிக்கு வெளியே ராம் சபூத்ரா என்ற ஹிந்துக்களின் வழிபாட்டு இடம் உள்ளது. அங்கு ஹிந்துகள் வழக்கம்போல பூஜை நடத்தியுள்ளனர். 
எனவே, பாபர் மசூதி இருந்த இடத்துக்கு வெளியே ஹிந்து சகோதரர்கள் ராமர் கோயில் கட்டிக் கொள்வதற்கும், வழிபாடு செய்வதற்கும் நாங்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை' என்றார்.
அதே நேரத்தில், அயோத்தியில் பிரபலமான ஹனுமன் கோயில் அர்ச்சகரும், ராம ஜென்மபூமி கோயில் நிர்மாண சமிதி (ஹிந்து மகாசபை) தலைவருமான மஹந்த் ஞான தாஸ், நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com