பிகார் நீதிமன்றங்களில் 18 லட்சம் வழக்குகள் நிலுவை

பிகார் நீதிமன்றங்களில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேசிய நீதித்துறை தகவல் கட்டமைப்பு (என்ஜேடிஜி) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் நீதிமன்றங்களில் 18 லட்சம் வழக்குகள் நிலுவை

பிகார் நீதிமன்றங்களில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேசிய நீதித்துறை தகவல் கட்டமைப்பு (என்ஜேடிஜி) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி நிலவரப்படி, பிகாரில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 16,74,883 ஆகும். பாட்னா உயர் நீதிமன்றத்தில் 1,45,110 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 16 சதவீத வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளவையாகும்.
பிகார் மாவட்ட நீதிமன்றங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த 2017 மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி சுமார் 21 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன. ஆனால்,நிகழாண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி இந்த எண்ணிக்கை சுமார் 16 லட்சமாக குறைந்துள்ளதாக என்ஜேடிஜி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
45 சதவீத நீதிபதிகள் பற்றாக்குறை: பிகார் கீழமை நீதிமன்றங்களில் 45 சதவீதம் அளவுக்கு நீதிபதிகள் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதன் காரணமாகவே வழக்குகள் தேங்குவதாகவும் அம்மாநில அட்வகேட் ஜெனரல் லலித் கிஷோர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
பாட்னா உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 53 ஆகும். ஆனால், 32 நீதிபதிகளே பணியில் உள்ளனர். கீழமை நீதிமன்றங்களில் 45 சதவீதம் அளவுக்கு நீதிபதிகள் பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி, கீழமை நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட 1,828 நீதிபதி பணியிடங்களில் 828 பணியிடங்கள் காலியாக உள்ளன.
பாட்னா உயர் நீதிமன்றத்தை பொருத்தவரை நீதிபதிகள் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, சனிக்கிழமைகளிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, வழக்குகளுக்கு தீர்வு காணப்படும் வேகம் அதிகரித்துள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com