ரயில்வே தேர்வுகளுக்கு வயது வரம்பு தளர்வு

கேரளம் மற்றும் பிகாரில் நடைபெற்ற போராட்டங்களை அடுத்து ரயில்வே துறை பணிகளுக்கான தேர்வுகளை எழுதுவற்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

கேரளம் மற்றும் பிகாரில் நடைபெற்ற போராட்டங்களை அடுத்து ரயில்வே துறை பணிகளுக்கான தேர்வுகளை எழுதுவற்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. இது தவிர மலையாளம் மற்றும் வங்க மொழிகளிலும் ரயில்வே தேர்வுகளை எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
என்ஜின் டிரைவர், உதவி என்ஜின் டிரைவர் ஆகிய பணிகளுக்கு பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 28-ஆக இருந்தது, இப்போது 30-ஆக உயர்த்தப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 31-இல் இருந்து 33-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான வயது வரம்பு 33-இல் இருந்து 35-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ரயில்வேயில் டி பிரிவு பணிகளுக்கான தேர்வு எழுதுவதற்கு, பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 28-இல் இருந்து 30 ஆகவும், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான வயது வரம்பு 34-இல் இருந்து 36-ஆகவும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான வயது வரம்பு 36-இல் இருந்து 38-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தமிழ், மலையாளம், கன்னடம், ஒடியா, தெலுங்கு, வங்கம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் ரயில்வே தேர்வுகளை எழுதலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரயில்வே தேர்வுகளை மலையாளத்தில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று கேரளத்தில் போராட்டம் நடைபெற்றது. அதேபோல ரயில்வே தேர்வு எழுத வயது வரம்பைக் குறைக்க வேண்டும் என்று கோரி பிகாரில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com