ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியல்: 81-ஆவது இடத்தில் இந்தியா

ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் சர்வதேச அளவில் இந்தியா 81-ஆவது இடத்தில் உள்ளது. ஆசியப் பிராந்திய அளவில் எடுத்துக் கொண்டால், பத்திரிகைகளுக்கு கருத்து சுதந்திரம்

ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் சர்வதேச அளவில் இந்தியா 81-ஆவது இடத்தில் உள்ளது. ஆசியப் பிராந்திய அளவில் எடுத்துக் கொண்டால், பத்திரிகைகளுக்கு கருத்து சுதந்திரம் வழங்காத மிக மோசமான நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் நிர்வாக நடவடிக்கைகளில் மலிந்திருக்கும் ஊழல் மற்றும் லஞ்சத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியலை சர்வதேச வெளிப்படைத்தன்மை நிர்வாகத்துக்கான அமைப்பு வெளியிட்டு வருகிறது. பூஜ்யத்திலிருந்து 100 வரையிலான புள்ளிகளின் அடிப்படையில் நாடுகளின் ஊழல் நிலை வரிசைப்படுத்தப்படுகிறது.
அதன்படி ஒரு நாட்டின் நிர்வாக வெளிப்படைத்தன்மை பூஜ்யமாக இருக்கும்பட்சத்தில் அங்கு ஊழல், லஞ்ச லாவண்யம் புரையோடியிருப்பதாகக் கருதலாம். அதே 100 புள்ளிகளாக இருந்தால் அந்நாட்டில் முறைகேடுகளே இல்லை என அறிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் நிகழாண்டுக்கான தரவரிசைப் பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா 40 புள்ளிகள் பெற்று 81-ஆவது இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் முறையே 89, 88 புள்ளிகள் பெற்று ஊழல் குறைந்த தேசங்களாக உள்ளன.
சீனாவைப் பொருத்தவரை, 41 புள்ளிகள் பெற்று தரவரிசைப் பட்டியலில் 77-ஆவது இடத்தில் இருக்கிறது. ஊழல் அதிகமாக இருக்கும் நாடுகளாக சிரியா, தெற்கு சூடான், சோமாலியா உள்ளிட்டவை உள்ளன. அவை முறையே, 14, 12, 9 ஆகிய இடங்களை பட்டியலில் பிடித்துள்ளன.
இதுதொடர்பாக சர்வதேச வெளிப்படைத்தன்மை நிர்வாகத்துக்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
இந்தியா, மாலத்தீவு, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளில் ஊழல் மலிந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோன்று அங்கு பத்திரிகை சுதந்திரமும் முடக்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்ட அந்நாடுகளைச் சேர்ந்த 15 செய்தியாளர்கள் கடந்த 6 ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆசியப் பிராந்தியந்தில் மிகவும் மோசமாக குற்றங்கள் அரங்கேறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com