பள்ளிப் பாடத்தில் தாய் மொழி கட்டாயம்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தல்

குறைந்தபட்சம் உயர் கல்வி வரையிலாவது தாய் மொழியைக் கட்டாயப் பாடமாக்க மாநில அரசுகள் முன் வர வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். சென்னை
சென்னை சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற 11-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவி எம்.மதுலட்சுமிக்கு பட்டம் வழங்குகிறார் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு. 
சென்னை சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற 11-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவி எம்.மதுலட்சுமிக்கு பட்டம் வழங்குகிறார் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு. 

குறைந்தபட்சம் உயர் கல்வி வரையிலாவது தாய் மொழியைக் கட்டாயப் பாடமாக்க மாநில அரசுகள் முன் வர வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். சென்னை வேலப்பன்சாவடி அருகே உள்ள சவீதா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 11-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு சவீதா பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் என்.எம்.வீரையன் தலைமை வகித்தார். உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலை வகித்தார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கிப் பேசியதாவது:
பிற மொழியைக் காட்டிலும் தாய் மொழியை குழந்தைகள் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். மேலும், தாய் மொழியில் கல்வி கற்கும்போதுதான் தனது கருத்துகளைப் பிறருக்கு திறம்பட வெளிப்படுத்த முடியும். குறைந்தபட்சம் உயர்கல்வி வரையிலாவது தாய் மொழியைக் கட்டாய பாடமாக்க அனைத்து மாநில அரசுகளும் முன் வர வேண்டும். நமது நாட்டில் மொழியும், பண்பாடும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் பழங்குடிகளின் மொழிகள் உள்பட பல தொன்மையான மொழிகளைக் காக்கும் கடமை நமக்கு உள்ளது. ஒரு நாட்டுக்கு வரலாறும், பண்பாடும் மிக முக்கியமாகும். இவை இரண்டையும் மறந்த நாடு ஒருபோதும் வளர்ச்சி அடையாது.
கிராமப்புறங்களில் மருத்துவர்கள்: மருத்துவத் துறையில் தனியாரின் பங்களிப்பு அளப்பரியதாகும். நமது கிராமப்புறங்களில் மருத்துவத்துக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அனைவருக்கும் சிறந்த மருத்துவம் சென்றடைய பல மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை தற்போது உள்ளது. நமது அரசும், சமுதாயமும் மருத்துவ மாணவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. அதை ஈடுகட்டும் விதமாக குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.
இவ்விழாவில், மருத்துவ மாணவர்கள் 18 பேருக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதுதவிர 42 பேர் பல்வேறு உயர்நிலை மருத்துவப் படிப்புகளில் பட்டம் பெற்றனர். 
இஸ்ரோ தலைவர் உள்பட 4 பேருக்கு கௌரவ டாக்டர் பட்டம்: இந்த விழாவில் தங்களது துறையில் சிறந்து விளங்கும் இஸ்ரோ மையத்தின் தலைவர் கே.சிவன் பிள்ளை,இந்திய பல் மருத்துவக் கவுன்சிலின் தலைவர் டாக்டர் திபேந்து மஜும்தார், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் அறிவியல் ஆலோசகர் ஜி. சதீஷ் ரெட்டி, சென்னை கே.சி.பி.குழுமத்தின் நிர்வாக இயக்குநர் வி. எல். இந்திரா தத் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.
இவ்விழாவில், சவீதா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எல்.ஜவகர் நேசன், பதிவாளர் மருத்துவர் வி.தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com