போர் விமானத்தை தனியாக இயக்கி பெண் விமானி சாதனை!

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 'மிக்-21 பைசன்' ரக போர் விமானத்தை தனியாக இயக்கி, அவனி சதுர்வேதி என்ற பெண் விமானி சாதனை படைத்துள்ளார்.
போர் விமானத்தை தனியாக இயக்கி பெண் விமானி சாதனை!

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 'மிக்-21 பைசன்' ரக போர் விமானத்தை தனியாக இயக்கி, அவனி சதுர்வேதி என்ற பெண் விமானி சாதனை படைத்துள்ளார்.
இந்தச் சாதனை மூலம், போர் விமானத்தில் தனியாகப் பயணம் செய்த முதல் இந்தியப் பெண் விமானி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில் உள்ள தேவ்லாந்து என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்த்தவர் அவனி சதுர்வேதி. இவர், விமானப் படையின் போர் விமானத்தில் தனியாகப் பயணிக்கப்போகும் முதல் பெண்ணாக தாம் வருவோம் என்று ஒருபோதும் நினைக்கவில்லை.
விமானப் படையில் சேர்ந்த அவர், கடந்த 2016-ஆம் ஆண்டு அடிப்படை பயிற்சி முடித்த பிறகு, போர் விமானப் படையில் இணைந்தார்.
அவனி சதுர்வேதி உள்பட 3 பெண் விமானிகளுக்கு போர் விமானத்தில் தனியாகப் பறப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜாம்நகர் விமானப் படைத் தளத்தில் இருந்து 'மிக்-21 பைசன்' ரக போர் விமானத்தில் கடந்த திங்கள்கிழமை சுமார் 30 நிமிடங்கள் தனியாகப் பயணம் செய்து அவனி சதுர்வேதி சாதனை படைத்தார்.
இவரது சாதனைக்கு விமானப் படைத் தலைமைத் தளபதி பி.எஸ்.தனோவா பாராட்டு தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'மிக்-21 பைசன்' போர் விமானத்தில் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்த அவனி சதுர்வேதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண் விமானிகளுக்கு சம வாய்ப்பு வழங்குவதில் இந்திய விமானப் படை எப்போதும் முன்னணியில் உள்ளது' என்றார்.
அமைச்சர் பாராட்டு: இதனிடையே, அவனி சதுர்வேதிக்கு மத்தியப் பிரதேச மாநில தொழில் துறை அமைச்சர் ராஜேந்திர சுக்லா வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 'இந்திய விமானப் படையின் வரலாற்றில் அவனி சதுர்வேதி புதிய அத்தியாயம் படைத்துள்ளார்; அவரது இந்தச் சாதனை, மத்தியப் பிரதேச மாநில மக்களின் நன்மதிப்பை உயரச் செய்துள்ளது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com