அதிநவீன ஆயுதங்களுடன் எல்லையில் முகாமிட்டுள்ள சீனப் படைகள்: மீண்டும் போர்ச்சூழல் உருவாகிறதா?

அதி நவீன ஆயுதங்களுடன் இந்திய எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அருகே சீனப் படையினர் முகாமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஆயுதங்களானது போர்க் காலங்களில்

அதி நவீன ஆயுதங்களுடன் இந்திய எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அருகே சீனப் படையினர் முகாமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஆயுதங்களானது போர்க் காலங்களில் அமெரிக்கா பயன்படுத்தும் வல்லமை மிக்க ஆயுதங்களைப் போன்ற நவீன தொழில்நுட்பத்திலானது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக எல்லையில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் போர்ச்சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 
டோக்கா லாம் பிரச்னை காரணமாக கடந்த ஆண்டில் இந்தியா - சீனா இடையே பதற்றம் நிலவியது. ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அப்பிரச்னை முடிவுக்கு வந்தது. இதனிடையே, கடந்த டிசம்பர் இறுதியில் அருணசாலப் பிரதேசத்தின் பைசிங் பகுதியில் சாலை செப்பனிடும் வாகனங்களுடன் (புல்டோஸர்கள்) சீனப் படைகள் மக்களோடு, மக்களாக ஊடுருவியதும் இருதரப்புக்கும் இடையேயான உறவில் விரிசலுக்கு வித்திட்டது.
அந்தப் பதற்றங்கள் சற்று தணிந்து நிலைமை தற்போது சுமுகமாகிவிட்டதாகக் கருதியிருந்த நிலையில், சீன வீரர்கள் இந்திய எல்லை அருகே அதி நவீன ஆயுதங்களுடன் முகாமிட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. க்யூடிஎஸ்-11 எனப்படும் நவீன தொழில்நுட்பத்திலான மின்னணு இயந்திர ஆயுதங்கள் ஒவ்வொரு சீன வீரர்களுக்கும் அளிக்கப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகை ஆயுதங்களானது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும், சிறிய ரக குண்டுகளை வீசித் தாக்குவதற்கு மட்டும் அல்லாமல் எதிரிகளின் மறைவிடத்தைக் கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது. க்யூடிஎஸ்-11 ஆயுதங்களைப் போன்ற வல்லமையான போர்த் தளவாடங்கள் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது. 
அதைத் தொடர்ந்து சீனாவும் அதை தனது ராணுவத்தில் இணைத்தது. இதுவரை அந்த வகை ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருந்து வந்த சீனா, தற்போது இந்தியாவை அச்சுறுத்தும் நோக்கில் அவற்றை எல்லைக்குக் கொண்டுவந்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத்திய பகுதியில் சீன ராணுவம் கடந்த சில நாள்களாக பயிற்சி மேற்கொண்டதும், அதேபோன்று இந்தியப் பெருங்கடலின் ஜிபோட்டி பிராந்தியத்தில் அந்நாட்டு கடற்படையினர் பயிற்சி எடுத்ததும் நினைவுகூரத்தக்கது. சீனாவின் இந்தச் செயல்பாடுகள் எல்லையோரப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றத்தை நிலவச் செய்யும் வகையில் அமைந்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com