ஒடிஸா, ம.பி.யில் இன்று இடைத்தேர்தல்

ஒடிஸா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

ஒடிஸா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
ஒடிஸாவில் பிஜேப்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தொகுதி வன்முறைகள் ஏற்பட வாய்ப்புள்ள தொகுதி என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து பர்கர் மாவட்ட ஆட்சியர் யாமினி சாரங்கி கூறுகையில், 'இடைத்தேர்தலுக்காக 281 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 270 வாக்குச் சாவடிகள் வாக்குப் பதிவுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்தன' என்றார்.
இடைத்தேர்தலையொட்டி, அந்தத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பர்கர் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் ஜெய் நாராயண் பங்கஜ் கூறியதாவது:
281 வாக்குச் சாவடிகளில் 155 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. நேர்மையாகவும், நியாயமான முறையிலும் தேர்தலை நடத்துவதற்காக 12 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எல்லைப் பகுதிகளில் 6 கண்காணிப்புச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் எதுவும் பிஜேப்பூர் தொகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றார் ஜெய் நாராயண் பங்கஜ்.
ஒடிஸா மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சுஷாந்த் சிங்கின் சகோதரர் மீது கடந்த வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிஜேப்பூரில் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து, பாதுகாப்புப் பணிகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
துணை ராணுவத்தினர், ஒடிஸா மாநில காவல் துறை அதிரடி படையினர், காவலர்கள் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்வதற்காக வாக்கு ஒப்புகைச் சீட்டு முறை பயன்படுத்தப்பட உள்ளதாக அந்த மாநில தேர்தல் அதிகாரி எஸ்.குமார் தெரிவித்தார்.
வாக்குப் பதிவு சனிக்கிழமை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவுபெறும். இம்மாதம் 28-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் எம்எல்ஏ சுபல் சாஹு காலமானதை அடுத்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவரது மனைவி ரீட்டா சாஹு அந்த மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் சார்பில் இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 
அத்துடன், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிடுகின்றனர்.
ம.பி.யில் இடைத்தேர்தல்: மத்தியப் பிரதேசத்தில் மங்காலி, கொலாரஸ் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காலமானதை அடுத்து இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதை மிகவும் அவசியமானதாகக் கருதுகிறது. இத்தொகுதிகளில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானும், காங்கிரஸ் எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியாவும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com