முதல்வர் கேஜரிவால் இல்லத்தில் தில்லி போலீஸார் திடீர் சோதனை

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இருவரால், தில்லி தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில் தில்லி போலீஸார்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி, கணினி சாதனங்களைக் கொண்டு செல்லும் தில்லி போலீஸார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி, கணினி சாதனங்களைக் கொண்டு செல்லும் தில்லி போலீஸார்.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இருவரால், தில்லி தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில் தில்லி போலீஸார் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சம்பவம் நடைபெற்ற தினத்தன்று சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான விடியோ அடங்கிய 'ஹார்ட் டிஸ்க்' கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். முதல்வர் வீட்டில் நடைபெற்ற இந்த சோதனையைத் தொடர்ந்து தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக கூடுதல் ஆணையர் ஹரீந்தர் சிங் கூறியதாவது: 
தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களைத் திரட்ட போலீஸ் குழு முதல்வர் கேஜரிவாலின் இல்லத்துக்கு அனுப்பப்பட்டது. முதல்வரின் வீட்டில் மொத்தம் 21 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் 7 கேமராக்கள் இயங்கவில்லை. கூட்டம் நடைபெற்ற அறையில் சிசிடிவி பொருத்தப்படவில்லை. எனவே, கடந்த 19-ஆம் தேதி நள்ளிரவு 12.15 மணிக்கு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளதாக நம்புகிறோம். இது தொடர்பாக கடந்த 20-ஆம் தேதி பதிவுகள் குறித்து கேட்ட போது உரிய பதில் கிடைக்கவில்லை. 
இதைத் தொடர்ந்து, சிசிடிவி பதிவுகள் அடங்கிய கணினி ஆய்வுக்குள்படுத்தப்பட்டது. சிசிடிவி பதிவுகளில் ஏதாவது மாற்றம் செய்யப்பட்டுள்ளதா எனக் கண்டறியும் வகையில் கணினியில் இருந்த 'ஹார்ட் டிஸ்க்' கைப்பற்றப்பட்டுள்ளது. 
சிசிடிவி பதிவுகளில் திருத்தம் ஏதும் செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக தடயவியல் பரிசோதனைக்குப் பின்னரே தெரிய வரும். அறிவியல்பூர்வமாக விசாரித்து வருகிறோம். தற்போதைய நிலையில் எதுவும் கூற இயலாது. இச்சம்பவம் தொடர்பாக முதல்வரையும், கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்களையும் தேவைப்பட்டால் விசாரிப்போம். முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற போலீஸ் விசாரணை தொடர்பாக இல்லத்தின் பராமரிப்பு பொறுப்பாளருக்கு தகவல் அளிக்கப்பட்டது என்றார் அவர். 
தில்லி போலீஸாரின் விசாரணை தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில், 'நிறைய பேர் கொண்ட தில்லி காவல் துறையினர் எனது வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இரு அறைவிட்டதாக தெரிவிக்கப்படும் புகார் தொடர்பாக முதல்வரின் வீடு முழுவதும் சோதனை இடப்பட்டது. நீதிபதி லோயா மரணம் தொடர்பாக பாஜக தலைவர் அமித் ஷா, எப்போது விசாரிக்கப்படுவார்?' என பதிவிட்டுள்ளார்.
ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை - துணைநிலை ஆளுநர்
ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்று தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் தெரிவித்தார்.
தில்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமைச்சர்கள் ஆகியோரை துணைநிலை ஆளுநர் தனது இல்லத்துக்கு அழைத்துப் பேசினார். இச்சந்திப்பு குறித்து துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்துள்ள துணைநிலை ஆளுநர், சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களும், பணியாளர்களும், அதிகாரிகளும் விரக்தியுற்றதாகவும், பாதுகாப்புயின்மையையும் உணரத் தொடங்கினால் எந்தவொரு அரசும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. ஜனநாயகத்திலும், சிவில் சமூகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. தில்லியின் வளர்ச்சி, பொது நலன் ஆகியவை பாதிக்கப்படமால் இருக்க வேண்டும். அதற்கு அரசு அதிகாரிகளுக்கும், தில்லி அரசுக்கும் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மையை களையத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com