அனைத்து துறையிலும் பெண்கள் பங்களிப்பை உறுதி செய்வது நமது கடமை

அனைத்துத் துறையிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வது ஒவ்வொரு இந்தியனின் அடிப்படையான கடமை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அனைத்து துறையிலும் பெண்கள் பங்களிப்பை உறுதி செய்வது நமது கடமை

அனைத்துத் துறையிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வது ஒவ்வொரு இந்தியனின் அடிப்படையான கடமை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 வரும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை மையமாக வைத்து "மனதில் குரல்' (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பேசினார். அவர் மேலும் கூறியதாவது:
 யசோதா நந்தன், கெüசல்யா நந்தன், காந்தாரி புத்திரர்கள் என பெண்களை மையமாக வைத்து ஆண்கள் அடையாளம் காட்டப்படுவது நமது பாரம்பரியத்திலேயே உள்ளது. ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்பதும் உண்மை. அவர் தாய், மனைவி, சகோதரி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
 நமது நாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், கலை, அறிவியல், அரசாட்சி, சமூகம், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சிறப்பான பங்களிப்பை ஆற்றி வந்திருப்பதை உணர முடியும். அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வது ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை கடமை ஆகும்.
 புதிய இந்தியாவை உருவாக்கும் மத்திய அரசின் திட்டம் பெண்கள் முன்னேற்றத்துக்கு அனைத்து வழிகளிலும் உதவிகரமாக இருக்கும். பெண்களின் மன உறுதியும், அசாத்தியமான திறமையும் இப்போது அவர்களை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றி வருகிறது. பெண்கள் முன்னேற்றத்தை மையமாகவைத்தே தேச வளர்ச்சியும் கட்டமைக்கப்படுகிறது. சிறந்த பெண்கள் வீட்டை மட்டுமல்லாது நமது சமூகத்தையும், நாட்டையும் உறுதியாகக் கட்டமைத்து வருகின்றனர். தற்சார்புடைய வாழ்க்கை அனைவருக்கும் முக்கியமானது என்றார் அவர்.
 தொடர்ந்து மார்ச் 4-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் தேசிய பாதுகாப்பு தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மோடி பேசியதாவது:
 நம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாழ்வில் உயர் நிலையை அடைவதற்கு இதுவும் ஒரு முக்கிய வழிமுறையாகும். சாலை முதல் பணியாற்றும் இடம் வரை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. பலர் அதனை வாசித்த பிறகும் அலட்சியமாக நடந்து கொள்வது வருத்தத்துக்குரியது.
 மழை, வெள்ளம், நில நடுக்கம் இயற்கைப் பேரிடர்களை நம்மால் தடுக்க முடியாது. அதனைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நமது வாழ்வில் ஏற்படும் விபத்துகளுக்கு பாதுகாப்பு குறித்து நாம் தகுந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்படாததுதான் முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது.
 கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அனல் காற்றால் நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம், இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுப்பது குறித்து பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு கோடையில் அனல் காற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 220-ஆக குறைந்தது. நாம் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதன் மூலம் பல உயிர்களைக் காக்க முடியும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளமுடியும்.
 தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "கோபர் தன்' திட்டத்தின் மூலம் கிராமங்களில் மாட்டுச் சாணம், பயிர் கழிவுகளை வைத்து எரிவாயு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 30 கோடிக்கு மேல் கால்நடைகள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 3 கோடி டன் அளவுக்கு கழிவுகள் கிடைக்கின்றன. சீனா, ஐரோப்பிய நாடுகளில் அனைத்து வகையான கால்நடைகளின் கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்கப்படுகிறது. இத்துறையில் இந்தியா அதிக தூரம் பயணிக்க வேண்டும். இத்திட்டம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் தருவதாகவும் அமையும். கோபர் தன் திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல சுய உதவிக் குழுக்களின் உதவி மிகவும் அவசியம் என்றார் மோடி.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com