உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அரசு தொடர்பான வழக்குகள் அதிகரிப்பு: மத்திய சட்ட அமைச்சகம்

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மத்திய அரசு தொடர்பான வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அரசு தொடர்பான வழக்குகள் அதிகரிப்பு: மத்திய சட்ட அமைச்சகம்

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மத்திய அரசு தொடர்பான வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகத்திடம் இருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இருக்கும் வழக்குகள் குறித்த புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது:
 உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை, கடந்த 2012ஆம் ஆண்டில் 4,149 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2013ஆம் ஆண்டில் 4,772ஆக இருந்தது. இதே எண்ணிக்கை 2014ஆம் ஆண்டில் 4,748 ஆனது. மத்தியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்தபிறகு, 2015ஆம் ஆண்டில் வழக்குகள் எண்ணிக்கை 3,909ஆக குறைந்தது. 2016ஆம் ஆண்டில் 3,497ஆக வழக்குகள் எண்ணிக்கை இருந்தது.
 ஆனால், 2017ஆம் ஆண்டில் வழக்குகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து விட்டது. அதாவது ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் மத்திய அரசு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 4,229 வழக்குகள் நிலுவையில் இருந்தன.
 இதற்கு, உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு போன்ற மத்திய அரசு எடுத்த முடிவுகளும் காரணமாகும்.
 நிகழாண்டில் ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 859 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
 உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்பான வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையில், மத்திய அரசு சார்பாக வாதிடும் வழக்குரைஞர்கள் எண்ணிக்கையோ குறைந்து விட்டது.
 இந்த எண்ணிக்கையை அடுத்த வாரத்துக்குள் 10ஆக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த ரஞ்சித் குமார் ராஜிநாமா செய்ததையடுத்து, அந்தப் பதவிக்கு அடுத்து யார் வரப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இதுவரை அந்தப் பதவியில் மத்திய அரசு யாரையும் நியமிக்கவில்லை.
 இதேபோல், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதவிகளுக்கு அமன் லேகி, மாத்வி திவன், சந்தீப் சேதி, விக்ரம்ஜித் பானர்ஜி ஆகியோரின் பெயர்களை மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதன்மீது மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கலாம். கூடுதல் சொலிசிட்டர்களாக இருக்கும் பி.எஸ். பத்வாலி, என்.கே. கௌல் ஆகியோரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com