கால்நடைத் தீவன வழக்கு: லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு

கால்நடைத் தீவன வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.
கால்நடைத் தீவன வழக்கு: லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு


கால்நடைத் தீவன வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.

லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், வழக்குரைஞர் விண்டேஸ்வரி பிரசாத் மரணம் அடைந்ததால், தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், பிகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவருமான லாலு பிரசாத் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அவர்களுக்கான தண்டனை விவரம், ஜனவரி மாதம் 3-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இன்று மூத்த வழக்குரைஞர் ஒருவர் மரணம் அடைந்ததால் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்று ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கின் பின்னணி: ஒன்றுபட்ட பிகார் மாநில முதல்வராக லாலு பதவி வகித்தபோது கடந்த 1996-ஆம் ஆண்டில், கால்நடைத் தீவனத் திட்டத்தில் சுமார் ரூ.950 கோடி ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 6 வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றில், சாய்பாஸா கருவூலத்தில் போலி கையெழுத்திட்டு ரூ.37.7 கோடியை முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் லாலு பிரசாத், முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். லாலு பிரசாதுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் எம்.பி. பதவியை லாலு பிரசாத் இழந்ததுடன், தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் இழந்தார். எனினும், உச்ச நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது.

இந்நிலையில், தேவ்கர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சம் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கு மீதான விசாரணை முடிவடைந்ததையடுத்து, ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவ்பால் சிங் அளித்த தீர்ப்பில், லாலு பிரசாத், ஜெகதீஷ் சர்மா (ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்), ஆர்.கே. ராணா (முன்னாள் அமைச்சர்), ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெக் ஜூலியஸ், பூல்சந்த் சிங், மகேஷ் பிரசாத், அரசு அதிகாரிகள் கிருஷ்ண குமார், சுபீர் பட்டாச்சார்யா, கால்நடைத் தீவன விநியோகஸ்தர்கள் திரிபுராரி மோகன் பிரசாத், சுஷில் குமார் சின்ஹா, சுனில் குமார் சின்ஹா, ராஜா ராம் ஜோஷி, கோபிநாத் தாஸ், சஞ்சய் அகர்வால், ஜோதி குமார் ஜா, சுனில் காந்தி ஆகியோர் குற்றவாளிகள் ஆவர்.

வழக்கில் இருந்து ஜெகந்நாத் மிஸ்ரா (முன்னாள் முதல்வர்), பொதுக் கணக்குக் குழுவின் முன்னாள் தலைவர் துருவ் பகத், முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஏ.சி. சௌதரி, கால்நடைத் தீவன விநியோகஸ்தர்கள் சரஸ்வதி சந்திரா, சாதனா சிங், முன்னாள் அமைச்சர் வித்யாசாகர் நிஷாத் ஆகிய 6 பேர் விடுவிக்கப்படுகின்றனர்.

லாலு சிறையில் அடைப்பு: லாலு பிரசாத் (69) உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதும், அவர்கள் உடனடியாக போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள், ராஞ்சியிலுள்ள பிர்ஸா முண்டா சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர்.

7 ஆண்டுகள் வரை சிறை?: லாலு பிரசாத் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவருக்கு அதிகபட்சமாக, 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று அவரது தரப்பு வழக்குரைஞர் சித்தரஞ்சன் பிரசாத் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com