தேசிய மருத்துவ ஆணைய மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு பரிந்துரை

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக புதிய ஆணையத்தை ஏற்படுத்த வகை செய்யும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மக்களவை பரிந்துரைத்துள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக புதிய ஆணையத்தை ஏற்படுத்த வகை செய்யும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மக்களவை பரிந்துரைத்துள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு தனது அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு அளிக்க வேண்டும் என்றும் மக்களவை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
எதிர்க்கட்சினர், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. இதை மத்திய அரசும் ஏற்கிறது.
ஆதலால், நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு இந்த மசோதாவை அனுப்பி, அந்தக் குழு தனது அறிக்கையை பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும்படி மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
இதையடுத்து, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு தேசிய மருத்துவ ஆணைய மசோதா அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்மீது பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு தனது அறிக்கையை நாடாளுமன்ற குழு அளிக்க வேண்டும். பொதுவாக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு இதுபோன்ற விஷயத்தில் 3 மாதம் அவகாசம் அளிக்கப்படும். ஆனால், இந்த விஷயத்தை பொறுத்தமட்டில், ஏற்கெனவே ஒரு நிலைக்குழு அறிக்கை அளித்து விட்டது' என்றார்.
முன்னதாக, தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது அந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த மசோதாவுக்கு இந்திய மருத்துவ கவுன்சிலும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. அந்த மசோதாவில் மருத்துவத் தொழில் புரிவோர், மருத்துவம் சாராத அதிகாரிகள் வர்க்கத்துக்கு பதிலளிக்க வேண்டிய கடமைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது; இது மருத்துவத் தொழில் புரிவோரின் செயல்பாடுகளை ஒடுக்கும் நடவடிக்கை என்று இந்திய மருத்துவ கவுன்சில் குற்றம்சாட்டியது.
இதைக் கண்டித்து, நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை கருப்புத் தினமாக அனுசரித்து, ஒரு நாள் மருத்துவர்களின் வேலை நிறுத்தத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தது. எனினும், இந்த மசோதாவை மக்களவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பியது தொடர்பான செய்திகள் வெளியானதும், தனது போராட்டத்தை இந்திய மருத்துவக் கவுன்சில் திரும்பப் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com